இன்று சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா தொடங்குகிறது. இன்று முதல் மே மாதம் 4ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நாட்டின் பல இடங்களிலும் தமிழ் அதிகம் ஒலிக்கும். தமிழ்மொழி விழாவில் இசை, நடனம், நாடகம், உரைகள், விவாதம், போட்டிகள், பயிலரங்குகள் என்று 46 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் 18வது ஆண்டாக தமிழ்மொழி விழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் இளையர்கள் நிகழ்ச்சிகள் படைப்பதும் பங்கெடுத்து வருவதும் கூடிவருகிறது.
‘தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்பதுடன் அடுத்த நிலை குறித்து நாம் திட்டமிட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவின் மிக வேகமான வளர்ச்சி, மொழியின் அடிப்படைகளான பேசுவதையும் எழுதுவதையும் மிக எளிதாக்கி வருகிறது. பிழையின்றி எழுதவும் உச்சரிக்கவும் மொழிபெயர்க்கவும் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. அதற்கப்பால் மொழியைப் பயன்படுத்தவும், மொழியில் சிந்திக்கவும் சிறக்கவும் ஆவன செய்ய வேண்டியதே சமூகத்தின் கடமை.
தொழில்நுட்பத்தின் தயவால் எக்காலத்திலும் தமிழ்மொழி இருக்கும். எழுத்தும் ஒலிப்பும் எப்போதும் எவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
மனத்தின் எண்ணங்களையும் அறிவின் தெறிப்பையும் அழகாகவும் ஈர்ப்போடும் நம் மொழியில் எடுத்துரைக்கும் ஆற்றல் செயற்கை நுண்ணறிவுக்கு அப்பாற்பட்டது. அதை வளர்ப்பதில் நம் வளங்கள் செலவிடப்பட வேண்டும்.
சிறப்புரை ஆற்றவும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் பெரும்பாலும் இன்னும் வெளிநாட்டினரையே அழைக்கிறோம். அவர்கள் திறனும் பிரபலமும் மிக்கவர்களாக இருப்பதால் அதிகமானோரை நிகழ்ச்சிக்கு ஈர்க்க முடிவது அதற்குக் காரணம். இந்தப் போக்கை இன்னும் எத்தனை காலத்துக்குத் தொடரப்போகிறோம் என்பதை தமிழ் மொழி விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் தமிழ்ச் சமூகம் சிந்திப்பது முக்கியம்.
தனித்திறன் மிக்க அறிஞர்களையும் கலைஞர்களையும் வெளியிலிருந்து வரவழைத்து, நம் சமூகத்திற்கு அத்திறன்களை அறிமுகப்படுத்துவதுடன், அந்த திறன்களை நம்மிடையே கடத்தவும் வளர்க்கவும் வகை செய்வதும் முக்கியம். தமிழகத்தில் கோலோச்சும் பேச்சாளர்களுக்கு இணையாக இங்கும் உருவாக வேண்டும்.
பாரம்பரிய இசையில் பயிற்சியும் திறனும் மிக்க சிங்கப்பூர் இசைக் கலைஞர்களை சங்கத் தமிழையும் காப்பியத் தமிழையும் இசை நிகழ்ச்சியாகப் படைக்க வைக்க வேண்டும். அருமையான கதைகளும் கவிதைகளும் எழுதும் இளையர் சமூகம் எழுச்சி பெற வேண்டும்.
அதிவேகமான பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சியோடு போட்டிபோடும் சூழலில், தமிழ்ப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பேண தமிழ் மொழி மீதான பற்றுத் தேவை.
அடையாளத்தின் ஆணிவேராக இருக்கும் மொழி நிலைத்திருக்க அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்கிறது. பிள்ளைகள் உணர்வுகளில் வேரூன்றித் தழைக்க பெற்றோரும் சமூகமும்தான் முயன்று பாடுபட வேண்டும்.
சிங்கப்பூரில் வாழும் தமிழ் சமூகத்தினிடையே, குறிப்பாக பிள்ளைகள், மாணவர்கள், இளையர்களிடத்தில் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசாங்கத்தால் 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது வளர்தமிழ் இயக்கம்.
அமைப்பு தொடங்கப்பட்ட காலத்தில் பிறந்த பிள்ளைகள் துடிப்பான இளையர்களாக இருப்பர். பல்கலைக்கழகங்களில் மேற்கல்வியைத் தொடர்வர், சிலர் வாழ்க்கைப் பணியில் ஈடுபடத் தொடங்கியிருப்பர். இந்தத் தலைமுறையினர் தொடக்கப்பள்ளியில் காலெடுத்து வைத்தபோது தமிழ்மொழி விழா தொடங்கப்பட்டது.
வளர்தமிழ் இயக்கம் செறிவான திட்டமிடலுடன் செயல்பட்டு, தமிழ்மொழி விழா துல்லிய இலக்குடன் நடத்தப்பட்டு வரும்பட்சத்தில், இன்றைய இளைய தலைமுறையினர் தமிழ்மொழியில் ஆர்வமும் ஆற்றலும் மிக்கவர்களாக இருப்பர்.
மொழியிலும் கலை, இலக்கியத்திலும் ஆற்றலுள்ள இளையர்களை அடையாளம் கண்டு உருவாக்க தமிழ்மொழி விழா மிக உவப்பான தளம். முத்தமிழ் விழாவிலும் திருக்குறள் விழாவிலும் அரங்கம் அதிரும் கைத்தட்டல்களை சிங்கப்பூர் பேச்சாளர்கள் பெறும் காலம் விரைவில் கனிய வேண்டும். ‘தமிழும் நானும்’ என்று சிங்கப்பூர் இசைவாணர்கள் தமிழ் இசைப்பதை உலகத் தமிழர் ரசிக்க வேண்டும்.
இந்நாட்டின் உருவாக்கத்தில் பங்களித்த தமிழ் மக்களின் உரிமையையும் இடத்தையும் வலுவாக ஊன்றிவைக்க, சிங்கப்பூர் தமிழர்கள், தமிழ்ச் சமூகம், தமிழ்மொழி சார்ந்த பெரிய அளவிலான முயற்சிகள் அதிகளவில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எத்தனை ஆண்டு கொண்டாடுகிறோம், எத்தனை நிகழ்ச்சி படைத்தோம், எத்தனை பேர் கூடினோம் என்பதெல்லாம் காலத்தில் நிலைப்பதில்லை. எத்தனை பேர் உருவானோம், எத்தகைய ஆற்றலை வளர்த்தோம் என்ற சிறப்பே காலம் தாண்டியும் நிலைபெறும்.
சிங்கப்பூர் தமிழரின் சிறப்பையும் பெருமையையும் உலக அரங்கில் எடுத்துக்காட்டும் இலக்குடன் தமிழ்மொழி விழாவைக் கொண்டாடுவோம்.