பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். எக்காலத்தும் கைவிடாத கல்வியை மாணவர்கள் கைவசப்படுத்தக் கைகொடுப்பவர்கள் ஆசிரியர்கள்தான். கல்விப் பாதையில் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவர்கள் ஆசிரியர்கள்.
ஓர் ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டும் என்பதுதான் தொழில்ரீதியாக அவரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நல்லாசிரியர் ஒருவர் பிள்ளைகளின் வாழ்வில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்; உன்னதமான முறையில் அவர்கள் வாழ்விற்கு உயிரோட்டம் தருகிறார் என்றால் அது மிகையில்லை.
போற்றுதலுக்கு உரியது ஆசிரியப் பணி என்பதால்தான் மற்றெந்தத் தொழிலுக்கும் அளிக்காத கௌரவத்தை அதற்கு வழங்கினர் நம் முன்னோர். அம்மா, அப்பா, ஆசிரியர், ஆண்டவன் என வரிசைப்படுத்தினர்.
‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி’ என்பதற்கேற்ப இளவயது முதற்கொண்டே முழுமையான முன்னேற்றத்தை நோக்கிப் பிள்ளைகளைச் செலுத்துபவர்கள் ஆசிரியர்கள். நற்பண்புகள், விழுமியங்கள், நன்னெறிகள் நிறைந்தவர்களாக அவர்களை வார்த்தெடுப்பவர்கள்.
அதனால்தான் ஆசிரியர்களுக்கான அதிபர் விருது நிகழ்ச்சியில், “உண்மையில் ஆசிரியர்களே நம் நாட்டைச் செதுக்கும் சிற்பிகள். சமூகத்தின் நன்மைக்காக தங்கள் பங்கை ஆற்றவுள்ள அடுத்த தலைமுறைச் சிங்கப்பூரர்களை அவர்கள் உருவாக்குகிறார்கள்,” என்றார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
சிங்கப்பூரில் கல்வி அறிவு பெற்றோர் விகிதம் உலகின் பல நாடுகளைவிட அதிகம். ஏறக்குறைய 97 விழுக்காட்டினருக்கு இங்கு எழுதப் படிக்கத் தெரியும் என்கின்றன ஆய்வுகள்.
நம் ஆசிரியர்கள் கற்பித்தலைத் தொழிலாக மட்டும் கருதாமல் அர்ப்பணிப்போடு செயல்படுவதால்தான் அறிவுக்கண் திறக்கப்பெற்ற சமூகமாக நாம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது.
ஆனால் ஓர் ஆசிரியரின் பணி எளிதானதன்று. அவர்களின் பொறுப்பு மிகப் பெரிது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே அறிந்த ஒன்றைத் தம்மினும் இளையவர்களுக்குச் சொல்லித்தருவது அவ்வளவு பெரிய செயலா என்று சிலர் கேட்கக்கூடும். ஒரே பாடத்தையே ஒவ்வோர் ஆண்டும் கற்பிப்பது ஒன்றும் கடினமில்லை எனச் சிலர் எண்ணக்கூடும்.
தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பாடத்திட்டம் மாறாவிட்டாலும் அதைக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் புதியவர்கள் அல்லவா?
வேளாண்மையில் ஒரு வயல் முழுக்க ஒரே பயிரை விளைவிப்பார்கள். விவசாயி அவற்றுக்குச் சமமான கவனிப்பைத் தந்தால் போதும்.
ஆனால் வகுப்பறை அப்படியன்று. மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கற்றல் திறன் இருக்கும். வெவ்வேறு பின்னணியைச் சார்ந்த பிள்ளைகளிடையே பண்புகளிலும் மாற்றம் இருக்கும்.
அவரவர்க்கு ஏற்றவாறு ஆசிரியர் செயல்பட வேண்டியுள்ளது. தேவைக்கேற்ப, விட்டுப்பிடித்தும் தட்டிக்கொடுத்தும் தாங்கிப்பிடித்தும் பட்டைதீட்டியும் அவர் மாணவர்களை ஊக்குவிக்கிறார்.
சிங்கப்பூரில் அதிகமான ஆசிரியர்களின் வகுப்பறைகளில் பத்தில் ஒரு மாணவர் புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறது பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு.
பன்மொழி பேசும் பல்லின, பல கலாசார நாடான சிங்கப்பூரின் பள்ளிகளில் புலம்பெயர்ந்த மாணவர்களும் பொருந்திப்போக பக்கபலமாக இருக்கின்றனர் ஆசிரியர்கள்.
மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்தை மட்டும் நடத்துவதில்லை. அந்த மொழி சார்ந்த கலாசாரத்தையும் பண்பாட்டையும் மாணவர்களுக்கு ஊட்டுகிறார்கள். அவற்றைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கிறார்கள்.
எப்போதெல்லாம் மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கும் விடுமுறை என்று சிலர் கருதக்கூடும். இக்கால ஆசிரியர்களுக்கு அது பொருந்தாது.
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் அவர்களும் தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டியுள்ளது.
அந்த வகையில், கற்றலைப்போல கற்பித்தலும் வகுப்பறைக்கு அப்பாலும் செயல்படவேண்டிய துறை. அதனால் வேலை-வாழ்க்கைச் சமநிலையை ஆசிரியர்கள் பல நேரங்களில் தியாகம் செய்யவேண்டியுள்ளது.
இதற்கான அங்கீகாரத்தை அவர்கள் எதிர்பார்க்காவிட்டாலும் ஆசிரிய சமூகத்திற்கு உரிய மரியாதையை அளிக்கவேண்டியது நமது தார்மீகக் கடமை.
இப்சோஸ் எனும் ஆய்வு நிறுவனம் சென்ற ஆண்டு 29 நாடுகளில் நடத்திய கருத்தாய்வில், சிங்கப்பூரர்களில் 74 விழுக்காட்டினர் ஆசிரியர்கள் மீதும் கல்விமுறை மீதும் உயர்ந்த மதிப்பு கொண்டிருப்பது தெரியவந்தது.
மற்ற நாடுகளைவிட இந்த விகிதம் அதிகம் என்பது மகிழ்ச்சிக்குரியதே என்றாலும் விரைவில் இதை 100 விழுக்காடு ஆக்குவோம்.
எண்ணும் எழுத்தும் அறிவிக்கும் இறைவனாம் ஆசிரியரை வணங்குவோம்!
பொறுமை, மனவுறுதி, விடாமுயற்சி, கவனக்குவிப்புடன் வகுப்பறைகளில் வரலாற்றைச் சொல்லிக்கொடுப்பதோடு நின்றுவிடாமல் வரலாறு படைக்கும் தலைவர்களை உருவாக்கும் பணியை உளப்பூர்வமாக மேற்கொள்ளும் ஆசிரியர்களை உளமார வாழ்த்துவோம்!

