தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருமொழி வேர்களை ஊன்றும் புது உத்திகள்

4 mins read
fe2b340d-03cb-4e86-b904-fba9164a3013
தாய்மொழி வளர்ச்சிக்கும் நீண்ட நாள் புழக்கத்துக்கும் கல்வி அமைச்சு அடுத்து எடுக்கவிருக்கும் திட்டங்களை கல்வி அமைச்சர் திரு சான் சுன் சிங் அமைச்சு சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடத்திய தாய்மொழிகள் கருத்தரங்கில் விவரித்தார். - படம்: சாவ் பாவ்

நாம் யார் எனும் கேள்வி எழுகையில், பல அடையாளங்களில் மொழி முதன்மையான ஒன்றாய் விளங்குகிறது. ஒரு மொழி, பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படாவிடில் ஓரிரு தலைமுறைகளைத் தாண்டி அவரவர் தாய்மொழி, புழக்கத்தில் வலுவிழந்து நாளடைவில் வழக்கொழிந்த மொழியாகி விடுகிறது. பல நாடுகள், தத்தம் நாட்டின் மொழியை ஆணித்தரமாக ஊன்றுவதிலேயே சிரத்தையாய் இருந்ததன் எதிர்மறையான தாக்கத்தை இப்போது உணர்கின்றன. ஒற்றை மொழி மக்கள்தொகையாய் இருப்பது, ஒரு  நாட்டின் ஊனமாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பூர் இந்த நடைமுறைக்கு மாறுபட்டு விளங்கும் நாடுகளில் ஒன்று. வணிகத்திற்காகப் பல நாடுகளிலிருந்து இங்கு வந்திறங்கியவர்கள் எனும் காரணத்தினால் பல்வேறு மொழிகள் சிங்கப்பூரின் மண்ணிற்குச் சொந்தமாகிவிட்டன. இருப்பினும், சுதந்திரமடைந்த சிங்கப்பூரின் அரசாங்க கொள்கைகளுக்கு நாம் அனைவரும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம். நான்கு அதிகாரத்துவ மொழிகளைப் பேச்சு, எழுத்துப் புழக்கத்தில் வைத்திருப்பதென்பது எளிதான காரியமன்று. இருமொழி என்பது நமது தேசிய அடையாளத்தின் அடிப்படைத் தூண் என்பதை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இருமொழி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டார்கள் என்றும் ஆங்கிலம் மட்டுமே போதுமானது என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆங்கிலம் பல்வேறு மொழியினரிடையே தொடர்புகொள்வதற்கும், உலகப் பொருளியலுக்கும் ஏதுவானதாக இருந்தாலும், நம்  இனத்தின் பண்பாட்டு, இலக்கிய, பாரம்பரிய மொழியாகச் செயல்பட இயலாது. அவரவர் தாய்மொழியே பண்பாட்டையும் இலக்கியத்தையும் வரலாற்று அடையாளங்களையும் தாங்கி வரும் ஆற்றல் கொண்டது. 

இருமொழிக் கொள்கையினால் பல்வேறு நன்மைகள் உண்டாவதாக பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. வெவ்வேறு இனத்தினர், மொழியினர் அவரவர் பழக்கவழக்கங்களையும் முன்னோக்குகளையும் கொண்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு மொழி பேசுபவர்களைவிட இருமொழி பேசுபவர்களுக்குத் திறன் உள்ளது. அவரவர் சுயகருத்துகளை மறுபரிசீலனை செய்வதற்கும், வெவ்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களை ஏற்றுக்கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது. 

மேலும், நிர்வாகச் செயல்பாடுகள், ஒருமித்த கவனம், நினைவாற்றல், அறிவுசார் கட்டுப்பாடு ஆகியவற்றில் இருமொழி பேசுபவர்கள் சிறந்தவர்கள் என்றும் மூளை மூப்படையும் வேகத்தைக் குறைத்து, ‘அல்சைமர்’ ஏற்படுவதை தாமதப்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது.

இதனைக் கருத்தில்கொண்டு, இருமொழி கற்றலுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க சிங்கப்பூர் தொடர்ந்து புதுப்புது உத்திகளையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.

தாய்மொழி வளர்ச்சிக்கும் நீண்ட நாள் புழக்கத்துக்கும் கல்வி அமைச்சு அடுத்து எடுக்கவிருக்கும் திட்டங்களை கல்வி அமைச்சர் சான் சுன் சிங், சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற கருத்தரங்கில் விவரித்தார்.

வரும் 2025ஆம் ஆண்டு முதல், பாலர் பள்ளிகளில் தாய்மொழிக் கல்விக்கான நேரம் நாளுக்கு, தற்போதைய 1 மணி நேரத்திலிருந்து 1.5 மணி நேரமாக அதிகரிக்கப்பட உள்ளது.

அத்துடன், ‘படிப்போம்; புத்தக வானில் பறப்போம்!’ (MTL SOAR) எனும் வாசிப்புத் திட்டத்தையும் கல்வி அமைச்சு படிப்படியாகச் செயல்படுத்தும். வரும் 2026 முதல்,  மாணவர்கள் தங்கள் தொடக்கப்பள்ளியின் இறுதித்தேர்வில் தாய்மொழியிலோ அல்லது உயர் தாய்மொழியிலோ சிறந்த தேர்ச்சி பெற்றாலே உயர்நிலை 1ல் உயர் தாய்மொழிப் பாடத்தை எடுக்க முடியும்.

அன்றாட வாழ்க்கையில் மொழிகளைப் பயன்படுத்தாதபோது, இளையர்களின் தேர்ச்சியை வளர்ப்பதற்கு எத்தனை கல்வி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை போதுமானதாக இரா. இதற்கு முழுமையான சமூக அணுகுமுறை அவசியம். பெற்றோர், பள்ளிகள், சமூகம் அனைத்தும் சேர்ந்து செயல்படும்போதுதான் இருமொழியிலும் ஆற்றல் பெற இயலும்.

கல்வி அமைச்சு செயற்கை நுண்ணறிவின்வழி மொழி வளர்ச்சிக்கான உத்திகளை ஆராயவுள்ளது. மாணவர் கற்றல் தளங்களில் பேச்சு மதிப்பீட்டு வழிமுறைகளை மேம்படுத்தி, மாணவர்களின் வாசிப்பு துல்லியத்திற்கும் சரளத்திற்கும் தானாகவே மதிப்பெண்களை வழங்கக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறான உச்சரிப்புப் பிழைகளை அடையாளம் கண்டு, சரியான வாசிப்பு முறையைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நம் தாய்மொழி உயிர்த்திருக்க வேண்டுமெனில் நாம் அதனோடு வாழ வேண்டும், இல்லையேல் அம்மொழி நம்மைவிட்டு விலகிவிடும் என்ற அமைச்சரின் அறைகூவலில் உள்ள உண்மை ஆழமாகப் புரிய காலம் கடந்துவிட்டால் வருத்தப்படவேண்டியிருக்கும்.

சிறுபான்மையினரின் மொழியாக இருக்கும் தமிழ், சிங்கப்பூரில் தொடர்ந்து வழக்கத்தில் இருக்க, தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர் இழுத்தாக வேண்டும். கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு தமிழர்கள் வாழும் நாட்டில் அதிகாரத்துவ மொழியாகத் தமிழ் இருப்பதால் மட்டும் அதன் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படமாட்டாது.

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து. மொழியின் அடிப்படைக் கூறுகள் மனத்தில் பதிய பாலர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கற்க ஊக்குவிப்பது அனைவரின் கடமையாகும். தமிழ்மொழியில் நமக்குத் திறன் இல்லாமல் இருந்தாலும் நம் பிள்ளைகளுக்குத் தரப்படும் வாய்ப்பினை இறுகப்பற்றிக்கொள்ள நாம் உந்துகோலாய் இருத்தல் அவசியம். 

ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி மாத நிகழ்ச்சிகளோடு தமிழ்மொழியின் பன்முகப் பயன்பாட்டை வெளிக்கொணரும் முயற்சிகள் நின்றுவிடாமல், தமிழ் வகுப்புகளைத் தாண்டி, ஆண்டு முழுதும் மாணவர்களின் வாழ்க்கையில் தமிழ் உலா வர பல முயற்சிகளை எடுக்க அனைவரும் உறுதிகொள்வோம்.

குறிப்புச் சொற்கள்