மின்னிலக்க வளர்ச்சியிலும் போட்டித்தன்மையிலும் உலகத் தரவரிசைகளின் உயர்ந்த நிலையில் இருக்கும் சிங்கப்பூரில், அரசாங்கம் தவறிழைப்பது அரிது. அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பது அதனினும் அரிது.
கடந்த வாரம் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் (ஏக்ரா) இயக்கும் பிஸ்ஃபைல் (Bizfile) இணைய வாசலில் அடையாள அட்டை எண்கள் வெளியானது குறித்துப் பொதுமக்களிடையிலும் சமூக ஊடகங்களிலும் சர்ச்சையுடன் சேர்ந்து குழப்பங்களும் பரவலாகின.
இதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தலைமையில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 19) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அடையாள அட்டை எண்கள் ஒருவரை அடையாளப்படுத்தினாலும் அவை ரகசியமானவையோ பாதுகாப்பானவையோ அல்ல என்று வலியுறுத்தப்பட்டது.
ஒருவரின் பெயரைப் போன்றே அடையாள அட்டை எண் கருதப்படவேண்டும் என்ற அமைச்சர் டியோ, அந்தத் தகவல் பலரும் அறியக்கூடியது என்பதையும் சுட்டினார். அது அடையாளத்தைக் குறிக்குமே ஒழிய அடையாளத்தை உறுதிப்படுத்தாது.
சிங்கப்பூர் அமைப்புகள் பொதுமக்களின் அடையாள அட்டை எண்களைப் பெறுவது, பயன்படுத்துவது, வெளியிடுவது, அத்தகைய அட்டைகளை நகல் எடுப்பது ஆகியவை 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சட்டவிரோதச் செயல் என்று தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் 2018ஆம் ஆண்டில் அறிவித்திருந்தது.
அப்போது முதல் தேவையுள்ள முக்கியமான நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் பாதுகாப்பான தகவலாக முழு அடையாள அட்டை எண் கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அதன் பாதுகாப்புத் தன்மை குறைந்துள்ளது.
இவ்வாண்டு ஜூலை மாதம் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு அரசு நிறுவனங்களுக்குத் வெளியிட்ட சுற்றறிக்கையில் புதிய வர்த்தகச் செயல்முறைகளிலும் சேவைகளிலும் மறைக்கப்பட்ட அடையாள அட்டை எண்களின் பயன்பாட்டை நிறுத்துமாறு குறிப்பிட்டது. இதைத் தவறாக புரிந்துகொண்ட ஏக்ரா, அதன் பயனாளர்களின் முழு அடையாள அட்டை எண்களை இலவசமாக வழங்கியது.
டிசம்பர் 9ஆம் தேதி பிஸ்ஃபைல் இணையவாசலில் தேடுதல் அம்சத்தைப் பயன்படுத்தி பயனாளர்களின் முழு அடையாள அட்டை எண்களைப் பெறும் முறை நேரலையானது. பொதுமக்கள் கவலை தெரிவித்ததை அடுத்து அந்தத் தேடுதல் அம்சம் டிசம்பர் 13ஆம் தேதி தற்காலிகமாக முடக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
திருத்தங்களுக்குப் பிறகு அடுத்த வாரம் மீண்டும் பிஸ்ஃபைல் தளம் திறக்கப்படும். மாற்றியமைக்கப்பட்ட தளத்தில் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பயனாளர்களின் அடையாள அட்டை எண்களைக் காண முடியும்.
ஏக்ராவிடம் சிங்கப்பூரிலுள்ள அனைத்து மக்களின் தகவல்கள் இல்லை என்பதும் வர்த்தகம் சார்ந்த இயக்குநர்கள், பயனாளர்கள் சார்ந்த தகவல்கள் மட்டுமே உண்டு என்பதும் சிறிதளவு ஆறுதலைத் தருகிறது.
மோசடிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நவீன உலகில் இதுபோன்ற சர்ச்சைகள் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்துவது இயல்பு. தகவல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தில் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதை இந்தச் சம்பவம் பறைசாற்றுகிறது.
எது எப்படியானாலும் நம் பாதுகாப்பு நம் கையில்.
முக்கியமான இணையத்தளக் மறைச்சொற்களுக்கு (passwords) அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்துவது தவறாகும். இணைய ஊடுருவிகள், மோசடிப் பேர்வழிகள் போன்றவர்கள் எளிதாக பயன்பாட்டுக் கணக்குகளில் நுழைய அது வழிவகுக்கும்.
உள்ளூர் வங்கிகளும் காப்புறுதி நிறுவனங்களும் இதன் தொடர்பில் மறுஆய்வு செய்து வருகின்றன. பணம் செலுத்துவதற்கும் நிதிப் பரிமாற்றங்களுக்கும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் அல்லது அங்க அடையாள அங்கீகாரம் (Biometrics) போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) கூறியது.
ஒரு வங்கியோ, நிறுவனமோ, அமைப்போ உங்கள் அடையாள அட்டை எண்ணைக் கொண்டு ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கச் சொன்னால் அதை உடனே நம்பிவிடவேண்டாம். தீர விசாரித்து மற்ற பாதுகாப்பு முறைகளுடன் அணுகுவதே சிறந்தது.
இந்நிலையில் தவற்றை ஒப்புக்கொண்டு அதை வேகமாகச் சீர்செய்ய முழு முயற்சியில் இறங்கும் சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பாராட்டவேண்டும். இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு அரசாங்கம் விவரிக்கும். அதற்கு ஏற்றவாறு சமுதாயம் மேலும் தெளிவுபெற்று, வழிமுறைகள் முன்பைவிடப் பன்மடங்கு சீராகும் என்று நம்பலாம்.
அரசின் பதில்களில் நம்பகத்தன்மையும் பொறுப்புணர்வும் தெரிகிறது. வரும் நாள்களில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று மின்னிலக்க உலகில் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிநடை போடும் என்பதில் ஐயமில்லை.