தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகமாய் சேர்ந்தே தமிழ் வளர்ப்போம்

3 mins read
47cd16de-35ff-4bda-bb67-2aadfeee56e6
தமிழ் வாசிக்கவும் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தவும் சிங்கப்பூரின் தேசிய நூலக வாரியம் வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்குகிறது. - கோப்புப் படம்

வாழும் மொழியாகத் தமிழ்மொழியை நிலைநிறுத்தச் சமூகம் ஒன்றுகூடி இழுக்கும் தேர் நேர்த்தியாய் நகர்ந்துகொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் தமிழ் சோறுபோடுமா, தமிழ் தேவையா, தமிழ் முக்கியமா போன்ற கேள்விகள் வெகுவாகக் குறைந்துவிட்டன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழ் மொழிமீதான ஆர்வம் அதிகரித்துள்ளதை, குறிப்பாக இளையர் சமூகத்தில் அதிகரித்துள்ளதை, அண்மையில் நடந்து முடிந்த தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

இளமை எனும் கருப்பொருளைக் கொண்ட இவ்வருடத் தமிழ்மொழி விழா, நிகழ்ச்சி தொகுப்பாளர்களை மாணவரிடம் இட்டுச் சென்றதனால், மாணவர்களை ஈர்க்கும் வகையில் புதிய வடிவங்களில், புதிய தலைப்புகளில், புதிய களங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாட்டாளர்கள் முயற்சி எடுத்தனர்.

இளையர்கள், மாணவர்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 65 விழுக்காட்டிலிருந்து இந்த ஆண்டு 74 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

பல நிகழ்ச்சிகளில் மாணவர்கள், இளையர்களின் தமிழ் மொழித்திறனைக் காணமுடிந்தது. அதுவும், மொழித்தரமும் பாராட்டுதற்குரியதாய் இருந்தது. கவிபெருக்கு ஏற்பாட்டில் மேடையேறிய ‘கவிதைப் பேச்சு’ நிகழ்வில், பல இளம் வயதினர், தாங்களாகவே கவி புனைந்து வாசித்தனர்.

அந்நிகழ்ச்சியில் கவிதை வாசித்த மூத்த கவிஞர்களுக்குத் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டினார்கள். பல்கலைக்கழக, மேலும் புகுமுக வகுப்பு மாணவர்களென, தமிழ்மொழி விழாவில் தமிழ் இளமையோடு உலாவந்தது. அதோடு, தமிழ்ச் சங்கங்களின் இளையர் குழு தங்களின் திறனைக் காட்டி விழாவிற்கு அழகு சேர்த்தனர்.

இந்திய முஸ்லிம் பேரவை, அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம், அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் சங்கம், சிற்பிகள் மன்றம் எனப் பல சங்கங்களும் மாணவர்கள் பலரும் பங்கேற்க ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்திலிருந்து பேச்சாளர்கள் வந்திருந்தாலும், அவர்களின் உரைகளுக்குமுன் இளையர்களின் தமிழ் அழகாய் அலங்காரமாய் மேடையேறியது. இது நம்பிக்கை தரும் அறிகுறி.

தமிழுக்குப் புத்துணர்ச்சி வந்திருப்பதற்குச் சில காரணங்கள் உண்டு. அதில் ஒன்று தமிழர்களின் தொடர் குடியேற்றம். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் குடியேறிய இளம் தம்பதிகளின் பிள்ளைகளும் இங்கே பிறந்து வளர்த்தவர்களும் ஒரு தமிழ் மக்களாய் மொழிக்கு வலுவூட்டுகிறார்கள்.

புதிதாகக் குடியேறுபவர்கள் தங்கள் இருப்பையும் அடையாளங்களையும் தக்கவைத்துக்கொள்ள இங்குத் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தியும் பங்கெடுத்தும் தமிழ்ப் புழக்கத்தை அதிகரித்து வருகின்றனர். உரிமையோடு, அரசாங்கத்தின் முழு ஆதரவோடு, சமூகத்தின் அரவணைப்பில் சிங்கப்பூரில் தமிழ் மிடுக்கோடு உள்ளது.

தமிழ்மொழி சமூக மொழியாக நிலைத்துநிற்க, அன்றாட வாழ்வில் தமிழ் பேசும் மொழியாகவும் வளர்வதே முக்கியம். அறிவியல், நிதி, பொருளியல், சுகாதாரம், தத்துவம், கலை, இலக்கியம் அரசியல், சமயம், உணவு எனப் பல்வேறு துறைகள் குறித்தும் தமிழில் உரையாட வேண்டும்.

அதிநவீனத் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு உள்படப் பலதுறைகளிலும் ஈடுபட்டுள்ள தமிழர்கள் தங்கள் துறைகள்மூலம் தமிழைப் பயன்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் அக்கறை செலுத்துவது தமிழுக்கு முக்கியம்.

கணினியிலும் இணையத்திலும் தமிழைப் பயன்படுத்தி வளர்த்ததில் சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு முன்னணி இடம் உண்டு. இதற்கு அடிப்படையான எழுத்துச் சீர்திருத்தத்திலும் தமிழ்ச் சொற்கள் வடிவமைப்பிலும் சிங்கப்பூரின் பங்கு பெரிதளவு.

ஒரு நாட்டில் ஒரு மொழியும் அதன் பண்பாடும் தழைத்திருக்க, அரசாங்கத்தின் ஆதரவோடு அம்மொழி பேசும் மக்களின் ஊக்கமும் தங்கள் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்முனைப்பும் தேவை. அந்தப் பெரும் பேற்றைச் சிங்கப்பூர்த் தமிழர்கள் பெற்றுள்ளனர்.

நாம் பெற்றிருக்கும் இந்த வரத்தை வாழவைக்க ஏற்றச் சூழலும் மேலும் சாதகமாக உள்ளது. சிங்கப்பூர் தமிழுக்கு ஒரு சித்தாந்தமும் வரலாறும் உண்டு. அதைத் தமிழில் பேசி, எழுதிப் படித்து அடுத்த தலைமுறையின் கையில் சேர்ப்பது நம் அனைவரது பொறுப்பு.

குறிப்புச் சொற்கள்