இளைய தலைமுறையும் தமிழும் - ஒளிமயமான எதிர்காலம்

இளைய தலைமுறையும் தமிழும் - ஒளிமயமான எதிர்காலம்

3 mins read
a6136091-c40c-4788-9a12-0f450c03a3fa
தமிழ்மொழி விழா 2026 மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. - படம்: த. கவி

தமிழ்மொழி கற்றல் என்பது உயர்கல்விக்குத் தகுதிபெறுவதற்காக, முக்கியத் தேர்வுகளில் மதிப்பெண் எடுக்கும் ஒரு கருவியாக மட்டுமே சுருங்கிப்போயுள்ளதாக ஒருபுறம் பலரும் பேசிவருகிறார்கள்.

அதே சமயத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் பலர் தமிழைச் சிறப்பாகக் கற்று முன்னேறி வருகின்றனர்.

உயர்தமிழ் பயில்வதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்தை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்துப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருவது ஒரு நம்பிக்கையூட்டும் போக்கு.

இந்த மாற்றத்திற்குப் பின்னால் பல முக்கியக் காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, பள்ளிகளில் மொழி கற்றல் முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களைச் சொல்லலாம். பழைய முறையைப் போலன்றி, இன்று மாணவர்கள் தங்கள் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்ப வெவ்வேறு நிலைகளில் மொழியைக் கற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் கல்வித்தரமும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். இது பலராலும் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை.

கடந்த 200 ஆண்டுகளில் பல குடிபெயர்வு அலைகள் சிங்கப்பூர் பக்கம் வீசியிருந்தாலும், குறிப்பாக, தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து, ‘மில்லெனியம் பக்’ (Millennium Bug - Y2K) சிக்கலைத் தீர்க்கவும், சீகா (CECA) ஒப்பந்தத்திற்குப் பிறகும், இந்தியாவிலிருந்து அதிகமானோர் சிங்கப்பூருக்கு வரத்தொடங்கினர். வேகமாய் விரிவடைந்து வந்த வங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கும், இணையம் சம்பந்தப்பட்ட சேவைகளுக்கும் ஏராளமான வல்லுநர்கள் இங்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் இளந்தம்பதியராகவோ சிறுகுழந்தைகளுடனோ இங்கு வந்தனர். ஒற்றையர்களாக வந்தவர்கள், பின்னர் இந்தியா சென்று திருமணம் முடித்து சிங்கப்பூரில் தங்கள் குடும்பங்களை அமைத்தனர்.

இங்குள்ள பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் பயின்ற அவர்களின் குழந்தைகள், தமிழ் பேசும் சூழல் நிறைந்த வீடுகளில் வளர்ந்தனர். அவர்களுக்கு அடிக்கடி இந்தியாவிற்குச் செல்லும் வாய்ப்பு இருந்ததால், தமிழின் ஆழமான பண்பாட்டுத் தொடர்பைத் தக்கவைத்துக்கொள்ளவும் முடிந்தது.

அக்குழந்தைகளின் தாத்தா பாட்டிமார் தமிழ் பேசினர். அவர்களது பெற்றோர்களும் பெரும்பாலும் தமிழ்மொழி கற்றவர்களாக இருந்தனர். மாறாக, பல தலைமுறைகளாக இங்கேயே தங்கிவிட்டவர்கள் இச்சூழலை இழக்கத் தொடங்கியிருந்தனர்.

மேலும், அக்குடும்பங்களின் சமூக வாழ்வு என்பது கோயில்கள், இசை, கலைப் பள்ளிகளைச் சுற்றியே அமைந்திருந்தது. சமய இலக்கியங்களையும் கலைகளையும் பயின்றபோது, தமிழோடு அவர்களுக்கு மேலும் தொடர்பு ஏற்பட வாய்ப்புகள் அமைந்தன. புதிய சமூக அமைப்புகள் பேச்சுப் போட்டிகள், பட்டிமன்றங்கள், நாடகங்கள் எனப் பல மொழிசார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

ஒவ்வோர் ஏப்ரல் மாதமும் நடைபெறும் தமிழ்மொழி விழா, அந்த அமைப்புகளின்மூலம் இளைய தலைமுறையினரைத் தமிழுடன் இணைக்க ஒரு பாலமாக விளங்கி வருகிறது.

இன்று, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மட்டும் தமிழைப் பயிலும் மாணவர்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தமிழ்வழி மேடைகளில் மிளிரும் இளையர்களும் பெருகிவிட்டனர். ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் இடையே தடையின்றி மாற்றிக்கொள்ளும் ‘இருமொழித் திறன்’ கொண்டவர்களாக, இரு மொழிகளையும் கலப்பின்றிப் பேசும் ஆற்றல் பெற்றுள்ளனர்.

பல தலைமுறையாக இங்கு வாழ்ந்தவர்களுக்கும், கடந்த 30 ஆண்டுகளில் இங்கு வந்தவர்களுக்கும் இடையே இன்னும் சற்று இடைவெளி இருந்துவந்தாலும், அவர்களின் வருகையால் தமிழ்ப் பண்பாட்டு நிலப்பரப்பும் தமிழ்மொழியும் இன்று செழுமையடைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது.

அக்குடும்பங்களில் பிறந்து இங்கேயே படித்த இளையர்கள், சமூக ஊடகங்கள் மூலமும் செயற்கை நுண்ணறிவு மூலமும் தமிழுக்கு அணிசெய்து, அழகாய்ப் பரப்பிவருகின்றனர். தமிழ் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகையில் ஈடுபட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாண்டுத் தமிழ்மொழி விழாவில் மாணவர்களின், இளையர்களின் பங்களிப்பு பேரளவிலும் வியப்பூட்டுவதாகவும் இருந்து வருகிறது. அவர்களின் மேடைப் பேச்சுகளிலும் நாடகங்களிலும் கவிதைகளிலும் ஒரு புதிய ஊக்கம் தெரிகிறது.

சிங்கப்பூரில் தமிழ்மொழியின் பயன்பாடு மீண்டும் ஏற்றம் காண்பதை நன்கு உணர முடிகிறது. சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலத்தின்மீது நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய நகரமாகச் சிங்கப்பூர் உருவெடுத்து வருவது நன்கு புலப்படுகிறது.

தமிழ் மாணவர்களையும் இளையர்களையும் ஊக்குவிப்போம். தமிழோடு வளர்ப்போம்.

குறிப்புச் சொற்கள்