மும்பை: கடந்த ஒரு வாரமாக மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒரே வாரத்தில் 1,100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. மரம் விழுந்தது தொடர்பான விபத்துகளில் சிக்கி மூன்று பேர் மாண்டுபோயினர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மும்பை மாநகரைத் தென்மேற்குப் பருவமழை புரட்டிப்போட்டு வருகிறது. திங்கட்கிழமை (ஜூலை 6) ஒரே நாளில் 523 மரங்கள் சாய்ந்துவிட்டன.
ஏற்கெனவே சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதாலும் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 30ஆம் தேதி செம்பூரில் பள்ளிப் பேருந்துமீது மரம் விழுந்த விபத்தில் 11 வயது மாணவன் உயிரிழந்தான். மாணவர்கள் மேலும் நால்வர் காயமடைந்தனர்.
ஜூலை 5ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற 18 வயது இளையர்மீது மரக்கிளை விழுந்ததில் அவர் உயிரிழந்தார். ஜூலை 6ஆம் தேதி குர்லா மேற்குப் பகுதியில் ஒரு கடைமீது மரம் விழுந்ததில் 63 வயது முதியவர் உயிரிழக்க நேரிட்டது.
மும்பையின் மேற்குப் புறநகர்ப் பகுதிகளில் 448 மரங்களும் கிழக்குப் புறநகர்ப் பகுதிகளில் 340 மரங்களும் நகரப் பகுதியில் 336 மரங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன.
மும்பையில் மழை நீடிக்கும் என்பதால் மரங்களின்கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாமென மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, அனுமதியில்லாத கட்டுமானங்கள், மரங்களின் வேர்களைச் சுற்றி கான்கிரீட் போடும் பணிகள் ஆகியவற்றால் மரங்களின் வேர்ப்பகுதி பலவீனமடைவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

