புதுடெல்லி: அமெரிக்கா, கனடாவில் அந்நாடுகளின் பாதுகாப்புப் படையினர் இணைந்து மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூட்டுப் புலனாய்வின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் ஹார்டு பால்’ (Operation Hard Ball) என்ற பெயரிலான அந்த நடவடிக்கையின் மூலம் அனைத்துலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவந்த பெரிய குற்றக்கும்பலின் கட்டமைப்பு முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொக்கைன், ஒரு கிலோ ஹெராயின், நாற்பதாயிரம் அமெரிக்க டாலர் ரொக்கம், பன்னிரண்டு அதிநவீன துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது.
அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பினரும் கனடா-ஐரோப்பிய ஒன்றியக் காவல்துறையினரும் கடந்த சில ஆண்டுகளாக இந்தக் குண்டர் கும்பலின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்தியாவைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், இந்தக் கும்பலின் தலைவராகச் செயல்பட்டுவந்த நிலையில், அவர் தற்போது இந்தியாவின் குஜராத் மாநிலச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எனினும் கைப்பேசிகள், இணையவழித் தொடர்புகள் மூலம் தனது கூட்டாளிகளை பிஷ்னோய் இயக்கி வருவதாக அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கனடாவில் கடந்த 2023ஆம் ஆண்டு காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப்சிங் நிஜார், படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருந்தது பிஷ்னோய் கும்பல்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் புகழ்பெற்ற பஞ்சாபிப் பாடகர் மூஸேவாலா, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் ஆகியோரின் படுகொலைகளிலும் பிஷ்னோய் கும்பலுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.
பிஷ்னோய் கும்பல் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகளை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக ஏற்கெனவே பல்வேறு புகார்கள் உள்ளன.
இதையடுத்து, பல நாடுகளின் உதவியோடு பிஷ்னோய் கும்பலின் கட்டமைப்பைத் தகர்க்கக் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் 24 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும், பத்துப் பேர் தேடப்பட்டு வரும் நிலையில், அவர்களில் ஏழு பேர் அமெரிக்காவிலும் இருவர் இந்தியாவிலும் ஒருவர் ஐரோப்பாவிலும் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பிடிபடும் பட்சத்தில் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முதல் வாழ்நாள் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஷ்னோய் கும்பல் இயங்கிவந்த பல்வேறு நாடுகளில் ஏராளமான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுவாழ் இந்தியப் புலம்பெயர் சமூகத்தினரிடமும் பேரச்சத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது.
தற்போது பிஷ்னோயின் கூட்டாளிகள் பிடிபட்டிருப்பதாலும் மேலும் பலருக்கு வலைவீசப்பட்டிருப்பதாலும் புலம்பெயர் இந்தியச் சமூகத்தினர் நிம்மதி அடைந்ததாக அமெரிக்க நீதித்துறை மேலும் தெரிவித்துள்ளது.

