கிரிக்கெட் வீரர்கள், நடிகைகள் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

2 mins read
c15b1f34-a24b-4304-a67c-f931ae6a2141
யுவராஜ் சிங், ஊர்வசி, சோனு சூட். - படங்கள்: புனே பல்ஸ்

புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்டச் செயலி தொடர்பான வழக்கில், பிரபல கிரிக்கெட் வீரர்கள், திரையுலகத்தினர் சிலரது சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் சூதாட்டச் செயலியின் மூலம் ஏராளமானோரிடம் பண மோசடி நடப்பதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இத்தகைய செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. மேலும் பல செயலிகள் கண்காணிக்கப்பட்டன.

இத்தகைய செயலிகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த அவற்றை உருவாக்கிய நிறுவனங்கள் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டன. அந்த விளம்பரங்களில் பல பிரபலங்கள் இடம்பெற்றதால் அச்செயலிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர்களும் முன்னணி திரையுலகத்தினரும் இத்தகைய விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பெருந்தொகையைப் பெற்றதாகத் தகவல் பரவியது.

அதன் பேரில், அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, இந்தி நடிகை ஊர்வசி ரௌடேலா, நடிகர் சோனு சூட், திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மிமி சக்கரவர்த்தி ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்குச் சொந்தமான ரூ.7.9 கோடி அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

யுவராஜ் சிங்கின் ரூ.2.5 கோடி, ராபின் உத்தப்பாவின் ரூ 8.26 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஊர்வசி ரௌடேலா தம் தாயார் பெயரில் வாங்கியுள்ள இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், நடிகர் சோனு சூட்டின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட நிலையில், மேலும் சில இந்தித் திரையுலகப் பிரபலங்கள் இந்த வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்