இரண்டு நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகம் வந்துள்ள திரு மோடிக்கு திருச்சி விமான நிலையத்தில் ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில், திரு மோடியை சந்தித்தார் பழனிசாமி.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பாரதிய ஜனதா உள்ளிட்ட இதர கட்சிகள் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் வந்து இத்தகவலை உறுதி செய்த நிலையில், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி அமைந்த பிறகு முதல் முறையாக நடைபெற்ற மோடி - எடப்பாடி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
சில நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடியிடம் மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் எடப்பாடி.
“விவசாயிகளின் கடன் தொடர்பிலான ‘சிபில் ஸ்கோர்‘ நடைமுறையிலிருந்து விலக்களிப்பது; தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வித்திடும் ராணுவ வழித்தடத்தை அமைப்பது; மற்றும் கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்துதல்,’ உள்ளிட்ட வேண்டுகோள்கள் அடங்கிய மனுவைப் பிரதமரிடம் சமர்ப்பித்தார் எடப்பாடி.
திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்கள் சந்திப்பு நடைபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் பிரதமரைச் சந்தித்தார் எடப்பாடி.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.