விஜயவாடா: ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 600 பேர் சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
விமானச் சேவைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல் காரணமாக அவர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் உள்ளது.
மக்கா, மதினாவுக்குப் புனித யாத்திரை சென்ற 600 பேரும் திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்தானதால் அங்குள்ள தங்குமிடங்களிலேயே முடங்கியுள்ளனர். கூடுதல் நாள்கள் தங்குவதற்கும் உணவுக்கும் மருத்துவச் செலவுகளுக்கும் பணமின்றி பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக முதியவர்கள், பெண்கள், தொடர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கையில் வைத்திருந்த மருந்துகள் தீர்ந்துபோனதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,500 பேர் உட்பட மொத்தம் 3,000 பேர்வரை சவூதியில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம், மருத்துவ உதவிகளை வழங்க ‘ஆந்திரப் பிரதேச வெளிநாடுவாழ் தெலுங்கு சங்கம்’ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிலமையின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விமானங்கள் மூலமாகவோ அல்லது முதலில் கிடைக்கக்கூடிய விமான இருக்கைகள் மூலமாகவோ குறிப்பாக முதியவர்கள் விரைவாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் முறையிடப்பட்டுள்ளது.
