தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுங்கானாவில் வெள்ளம், உத்தராகண்டில் மேக வெடிப்பு, காஷ்மீர், பஞ்சாப்பில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

2 mins read
9d967def-16cc-4777-b3cb-9a49acf72533
பஞ்சாப்பில் மீட்புப் பணிகளில் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. - படம்: ஊடகம்

ஹைதராபாத்: வடஇந்திய மாநிலங்களை அடுத்து, தென்னிந்திய மாநிலங்களிலும் பதம்பார்க்கத் தொடங்கியுள்ளது பருவ மழை.

தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் கனமழை காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

காமரெட்டி, மேடக், நிர்மல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாவட்டங்களில் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பெய்த பலத்த மழையால், அர்கோண்டா என்ற கிராமமும் அதன் அருகேயுள்ள மற்ற சிற்றூர்களும் தனித்தீவுகளாக மாறிவிட்டன.

தெலுங்கானாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், ஆங்காங்கே சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டும் சுவர் இடிந்த சம்பவங்களினாலும் குறைந்தது 5 பேராவது பலியாகியிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஐந்து பேர் மாயமாகியுள்ளதால், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியைத் தேசிய மாநில பேரிடர், ராணுவப் படைகள் ஈடுபட்டுள்ளன.

ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில், வெள்ளத்தில் சிக்கிய 8 கிராமவாசிகளை இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்டது.

மேடக் மாவட்டத்தில் பல கிராமங்களில் மழைநீர் சூழ்ந்திருப்பதால், அங்கு சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை எண் 44ல் போக்குவரத்து நிலைகுத்தியது. அந்த நெடுஞ்சாலையில் 30 கிலோ மீட்டர் துாரத்துக்கு மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் நிலவரம்

இதனிடையே, பஞ்சாப் மாநிலத்திலும் கனமழை ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் பெய்த பலத்த மழையால் ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளதாகவும் பதான்கோட், குா்தாஸ்பூா், ஃபெரோஸ்பூா், அமிர்தசரஸ் உள்ளிட்ட பஞ்சாப்பின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தராகண்ட் நிலவரம்

உத்தராகண்ட் மாநிலத்திலும் மழையின் பிடி இறுகி வருகிறது. அங்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) இரண்டு இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டதில் மழை கொட்டித் தீர்த்தது. இம்முறையும் பலர் மாயமாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 29ஆம் தேதி சாமோலி, ருத்ரபிரயாக் ஆகிய இரண்டு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டதில், பலர் மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலரைக் காணவில்லை.

குறிப்புச் சொற்கள்