பாட்னா: பீகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு நோயாளிகள் உயிரிழந்தனர்.
நான்கு நோயாளிகள் தீயில் கருகி மாண்டுவிட்டதாகவும் 24 நோயாளிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சுப்ரதா குமார் சென் தெரிவித்துள்ளார். அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுப் பொறுப்பாளரும் அடங்குவார் என அவர் குறிப்பிட்டார்.
தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள உயிர்வாயுக் கருவி, கண்காணிப்பு அமைப்பில் ஏற்பட்ட மின்கசிவே தீவிபத்துக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அதை உறுதிசெய்ய விசாரணை நடைபெறுவதாக ஆட்சியர் சுப்ரதா குமார் தெரிவித்தார்.
இதனிடையே, வியாழக்கிழமை (ஜூன் 4) அதிகாலை 3:55 மணிக்குத் தீவிபத்து தொடர்பாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் உடனடியாக ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்குச் செல்வதற்கான கதவுகளையும் சன்னல்களையும் உடைத்துத் திறந்ததாகவும் தீயணைப்புத்துறை கூறியது.
மேலும், புகை சூழ்ந்த கட்டடத்தில் இருந்து நோயாளிகள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீட்கப்பட்ட போதிலும் அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் தீயணைப்புத் துறை அதிகாரி ராம் நிவாஸ் பாண்டே கூறினார்.
வீரர்கள் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் நான்கு, ஐந்தாம் தளங்களில் அமைந்துள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு, காத்திருப்பு அறை ஆகிய இடங்களில் உள்ளவர்களை மீட்பது கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலர், தங்கள் குடும்பத்தார் நோய்வாய்ப்பட்டு, அம்மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தவிப்புடன் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் சிலர், மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினர்.
மருத்துவமனையின் இந்த அலட்சியப்போக்கு குறித்தும் விசாரிக்கப்படும் என்று ஆட்சியர் சுப்ரதா உறுதி அளித்துள்ளார்.

