ரூ.18 கோடி மதிப்பிலான சட்டவிரோதச் சொத்து; தெலுங்கானா அதிகாரி கைது

ரூ.18 கோடி மதிப்பிலான சட்டவிரோதச் சொத்து; தெலுங்கானா அதிகாரி கைது

1 mins read
6d9e3582-fb08-45f2-bd33-8f1b3e2d4653
மோகன் நாயக் ஜருப்லா (இடது), பிடிபட்ட பொருள்களில் சில. - படங்கள்: என்டிடிவி
multi-img1 of 3

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில ஊழல் ஒழிப்புப் பிரிவு, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், மாநிலச் சாலை, கட்டடத் துறையின் தலைமைப் பொறியாளர் மோகன் நாயக் ஜருப்லாவைக் கைதுசெய்துள்ளது.

அவரது அலுவலகம், இல்லம் மட்டுமன்றி அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் திடீர்ச் சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் சட்டவிரோதமான முறையில் அவர் சேர்த்த பல்வேறு அசையும், அசையாச் சொத்துகள் குறித்துத் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஏறத்தாழ 83 லட்ச ரூபாய் மதிப்பிலான 19 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள், மொத்தம் 7 கோடி ரூபாய்க்குமேல் பெறுமானமுள்ள 7 அடுக்குமாடி வீடுகள், இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று மாடிச் சொகுசு வீடு ஒன்று, 62 லட்ச ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்படும் வீடு போன்றவை அவற்றில் அடங்கும்.

மேலும், 55 லட்சம் ரொக்கம், $1.44 கோடி வங்கி வைப்புத்தொகை, இரண்டரைக் கிலோ தங்க நகைகள், 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றுடன் விலையுயர்ந்த மின்னணுக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசாங்கப் பதிவுகளின்படி அவற்றின் உத்தேச மதிப்பு 17.95 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய சொத்துச் சந்தை நிலவரப்படி அவற்றின் உண்மை மதிப்பு ரூ.100 கோடியைத் தாண்டும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

கைது செய்யப்பட்ட அதிகாரி மோகன் நாயக் ஜருப்லா, நீதிமன்ற விசாரணைக்காக ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் சேர்த்துவைத்த கூடுதல் சொத்துகள் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்