புதுடெல்லி: அமெரிக்காவின் வரியால் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 64 பில்லியன் டாலர் (S$82.36) மதிப்பிலான பொருள்களுக்குச் சாதகமாக இருக்கும் போட்டித்தன்மையை இந்தியா இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் உள்மதிப்பீட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி நான்கு வட்டாரங்கள் கூறியதாக அது தெரிவித்தது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 10 விழுக்காடு அபராதமும் விதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
வரி உயர்வால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், இந்தியாவின் மத்திய வங்கி நடப்பு ஏப்ரல்-மார்ச் நிதி ஆண்டுக்கான நாட்டின் பொருளியல் வளர்ச்சிக் கணிப்பை மாற்றவில்லை.
இந்தியா 6.5% வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை (ஆகஸ்ட் 6) தெரிவித்தார்.
“இறந்த பொருளியல் என்று டிரம்ப் கூறும் இந்தியாதான், உலகளாவிய வளர்ச்சிக்கு அதிகம் பங்களிக்கிறது. உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா 18 விழுக்காடு பங்களிப்பைத் தருகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட 11 விழுக்காடு வரையில்தான் பங்களிக்கிறது,” என்று அவர் கூறினார்.
எதிர்பாராத விதமாக இந்தியப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது என்றும் அத்துடன் அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, வர்த்தக தாக்க மதிப்பீடுகள் இந்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டன.
இந்திய அரசாங்கம் தனது மதிப்பீட்டு அறிக்கையில் ரஷ்ய எண்ணெய்யை வாங்கினால் 10% அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இது வரியை 35 விழுக்காடாக அதிகரிக்கிறது என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத் தரவுகளின்படி, ஆடைகள், மருந்துகள், விலைமதிப்புள்ள கற்கள், நகைகள், பெட்ரோலிய வேதிப்பொருள்கள் உட்பட, 2024 ஆம் ஆண்டில் 81 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது.
2024ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காடாக இருந்தது.
உலகளவில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 2024ல் 443 பில்லியன் டாலராக இருந்தது.
இந்நிலையில், “ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து இந்திய நிறுவனங்கள் விலகிச் சென்றாலும் அதனால் உள்நாட்டு பணவீக்கத்தில் எந்தத் தாக்கமும் இருக்காது. கச்சா எண்ணெய்க் கொள்முதல் விலை எளிய மக்களைப் பாதிக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்வர்,” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.