எல்லை மோதலால் மீண்டும் பதற்றத்தில் இந்தியா-சீனா உறவு

எல்லை மோதலால் மீண்டும் பதற்றத்தில் இந்தியா-சீனா உறவு

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

28 Oct 2026 - 2:56 pm

2 mins read

புதுடெல்லி: கடந்த ஓராண்டாக இந்தியா-சீனா இடையிலான உறவு சீரடைந்து வந்த நிலையில், இமயமலை எல்லைப் பகுதியில் மீண்டும் எழுந்துள்ள பதற்றம் இரு நாடுகளுக்கிடையிலான அமைதி முயற்சிக்குத் தடையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய-திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநர் சத்ருஜித் சிங் கபூர் அண்மையில் ராஜஸ்தானில் பேசியபோது, அருணாச்சலப் பிரதேசத்தின் ‘உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டு’ (LAC) எல்லைக்குள் ஆறு முதல் ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை சீனப் படைகள் ஊடுருவிக் கூடாரங்களை அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவரது அறிக்கை டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

எல்லைக் கண்காணிப்பு நடைமுறைகளிலிருந்து சீனா விலகும்போது பதற்றம் ஏற்படுவதாக தற்போதைய ஊடுருவல் குற்றச்சாட்டு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு விளக்கமளித்தது. வழக்கமான கண்காணிப்புப் பணிகளையே மேற்கொள்வதாகச் சீனா கூறியது.

என்றபோதும், எல்லைப் பதற்றம் குறித்து இந்திய அரசு மூடிமறைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

அருணாச்சலப் பிரதேசத்தைத் தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என சீனா உரிமை கோரி வருகிறது. அதனை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. 1962ல் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் போர் நடைபெற்ற போதிலும், 3,440 கிலோ மீட்டர் நீளமுடைய அந்த எல்லைப் பகுதி இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை.

கரடுமுரடான நிலப்பரப்பு தெளிவான எல்லையை அமைப்பதைக் கடினமாக்குகிறது. இதனால் இருநாட்டுப் படைகளும் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டு, தூதரகப் பதற்றம் உண்டாகிறது.

முன்னதாக, 2020 ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 4 சீன வீரர்களும் உயிரிழந்தனர். தொடர்ந்து 2024ல் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி தூதரக உறவுகள், நேரடி விமானங்கள், விசா தளர்வுகள் சீராகின. கடந்த செப்டம்பரில் சீன அதிபர் ஸி ஜின்பிங் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டிற்காக இந்தியாவிற்கும் வருகை தந்தார்.

எல்லையில் சீனா தொடர்ந்து தனது இருப்பை வலுப்படுத்தி நிலையை மாற்றி அமைப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகம் 151 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தாலும், அதில் சீனாவின் ஏற்றுமதியே 131 பில்லியன் டாலராக அதிக பங்கைக் கொண்டுள்ளது. சுரங்கப் பாதை தோண்டும் இயந்திரங்கள், அரிய வகை காந்தத் தாதுக்களின் ஏற்றுமதிக்குச் சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள், இந்தியாவின் உள்கட்டமைப்பு, தொழில்துறைப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உள்ளன.

எல்லைக் கிராம மக்களின் வாழ்வாதாரமும் கால்நடைமேய்ச்சல் நிலங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. தூதரகப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும் எல்லையில் நிரந்தர அமைதி திரும்புவது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசீனாஎல்லைபதற்றம்இருதரப்பு உறவுமோதல்