இந்தோனீசியாவின் மாபெரும் இந்துக் கோயிலை மறுசீரமைக்கும் இந்தியா

இந்தோனீசியாவின் மாபெரும் இந்துக் கோயிலை மறுசீரமைக்கும் இந்தியா

2 mins read
6bfad438-88b4-45db-93ea-9aab1b43b273
பிரம்பனன் கோயில் மறுசீரமைத் திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் புதன்கிழமை (ஜூலை 8) தொடங்கி வைத்தனர். - படம்: டெடிக் நியூஸ்
multi-img1 of 2

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் யோக்யகர்த்தாவில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரம்பனன் கோயிலை இந்தியா மறுசீரமைக்க உள்ளது.

இந்தோனீசியாவின் மிகப் பெரிய அந்த இந்துக்கோயில் சீரமைப்புத் திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் யோக்யகர்த்தாவில் புதன்கிழமை (ஜூலை 8) தொடங்கிவைத்தனர்.

இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, முதல் கட்டமாக இந்தோனீசியா சென்றார்.

பயணத்தின் ஒரு பகுதியாக, யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னமான பிரம்பனன் கோயிலுக்குச் சென்றார்.

இந்தியாவின் உதவியுடன் அக்கோயில் வளாகத்தைப் பாதுகாத்துச் சீரமைக்கும் திட்டத்தைத் தொடங்குவதற்கான விருப்பக் கடிதத்தை இருநாட்டவரும் செவ்வாய்க்கிழமை பரிமாறிக்கொண்டனர்.

2025ஆம் ஆண்டு இந்தியா - இந்தோனீசியா மேற்கொண்ட பங்காளித்துவ ஒப்பந்தத்தின்படி, கோயிலின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்குகிறது.

இந்திய கலாசார அமைச்சு, இந்தோனீசியா பாரம்பரிய முகமை, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியவை இணைந்து மறுசீரமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளன. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் வல்லுநர் குழு ஏற்கெனவே அங்கு கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.

பிரம்பனன் வளாகத்தில் உள்ள மூன்று முக்கியக் கோயில்களைச் சுற்றியுள்ள ‘பெர்வாரா’ எனப்படும் சிறிய துணைச் சன்னதிகளைச் சீரமைப்பதில் முதன்மையாகக் கவனம் செலுத்தப்படும் என்று இந்தோனீசியக் கலாசார அமைச்சர் ஃபட்லி சோன் தெரிவித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கம்போடியாவின் அங்கோர் வாட் முதல், வியட்னாம், பங்களாதேஷ், லாவோஸ் ஆகிய நாடுகளில் உள்ள தொன்மையான வரலாற்றுச் சின்னங்களை வெற்றிகரமாக மீட்டெடுத்த அனுபவம் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு உண்டு.

1,000 பழமையான மும்மூர்த்திகள் கோயில்

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பனன் கோயில் கி.பி. 850 வாக்கில் கட்டப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பனன் கோயில் கி.பி. 850 வாக்கில் கட்டப்பட்டது. - படம்: ரஃப் கைட்ஸ்

யோக்யகர்த்தா நகரத்திலிருந்து வடகிழக்கே கிட்டத்தட்ட 17 கிலோ மீட்டர் தொலைவில் பிரம்பனன் கோயில் உள்ளது.

ஜாவா தீவில் பௌத்த ஆட்சியைத் தொடர்ந்து மீண்டும் இந்துக்களின் ஆட்சி மலர்ந்ததை அடையாளப்படுத்தும்விதமாக கி.பி. 850 வாக்கில் மதராம் பேரரசின் சஞ்சய வம்சத்தைச் சேர்ந்த அரசர் ரகை பிகாதன் என்பவரால் அக்கோயில் கட்டப்பட்டது.

முப்பரிமாண மண்டல வடிவில், மூன்று சதுர அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ள கோயில் வளாகத்தின் மையப்பகுதியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கான கோயில்கள் அமைந்துள்ளன. கோயில்களில் ராமாயணக் காவியக் காட்சிகளைச் சித்திரிக்கும் சிற்பங்கள் நிறைந்துள்ளன.

மையத்திலிருக்கும் சிவன் கோயில் மிக உயரமானது. உள்ளூர் மக்களின் நாட்டுப்புறக் கதைகளின்படி, அந்தச் சிவன் கோயிலில் உள்ள துர்க்கை சிலை, இளவரசி ‘ரோரோ ஜோங்ராங்’ என்பவருடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களாலும், 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கம், எரிமலைச் சீற்றங்களாலும் அக்கோயில் கடுமையாகச் சிதிலமடைந்து, பல நூற்றாண்டுகளாகக் காடுகளுக்குள் மறைந்திருந்தது. 1733ல் டச்சுக்காரரான சி.ஏ. லோன்ஸ் என்பவரால் அக்கோயில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அக்கோயில் அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்