ஹைதராபாத்தில் இந்தியாவின் முதல் ஏஐ காவல் நிலையம்

ஹைதராபாத்தில் இந்தியாவின் முதல் ஏஐ காவல் நிலையம்

படம்: ஏஎன்ஐ

12 Nov 2026 - 8:31 pm

2 mins read

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையம், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் சார்ந்த காவல் நிலையமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சி.வி. ஆனந்தின் வழிகாட்டுதலின் கீழ், முன்னோடித் திட்டமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆணையர் சஜ்ஜனார், பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புதன்கிழமை (நவம்பர் 11) உதவி ஆணையர் முரளி கிருஷ்ணா, ஆய்வாளர் ஜஹாங்கீர் ஆகியோருடன் இணைந்து அங்கு அமைக்கப்பட்டு வரும் ஏஐ தொழில்நுட்ப வசதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

புகார் அளிக்க வந்திருந்த பொதுமக்களிடம் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துடன், காவல் நிலையப் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தார்.

“டிசம்பர் முதல் வாரத்தில் டிஜிபி தலைமையில் இந்த ஏஐ காவல் நிலையம் முன்னோடித் திட்டமாகத் தொடங்கி வைக்கப்படும். இதன் செயல்பாடுகள், மக்களின் கருத்துகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் சஜ்ஜனார் கூறினார்.

காவல் நிலைய வரவேற்பறையில் நிறுவப்பட்டுள்ள ‘சேது’ (Sethu) தானியங்கி இயந்திரம் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 மொழிகளில் புகார்களைப் பதிவு செய்யலாம். ஏஐ தொழில்நுட்பம் அவற்றை உள்ளூர் மொழிக்கு மொழிபெயர்த்து சில நொடிகளிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும்.

முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்வது முதல் வழக்கு நாட்குறிப்பு, புலனாய்வு அறிக்கைகள் மற்றும் குற்றப்பத்திரிகை தயாரிப்பது வரை அனைத்தும் ஏஐ மூலம் மேற்கொள்ளப்படும்.

மேலும், பஞ்சகுட்டா பகுதியின் போக்குவரத்து நெரிசல், விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் குற்றப் பின்னணித் தரவுகளை ஏஐ மூலம் பகுப்பாய்வு செய்து ‘புளூ கோல்ட்ஸ்’ (Blue Colts) கண்காணிப்புப் பணிகள் திறம்பட இயக்கப்படும் என்றும், இதற்காகப் பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்