புதுடெல்லி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரு பெரிய அண்டை நாடுகளுக்கு இடையே இத்தகைய பிரச்சினைகள் எழுவது இயல்பானதுதான் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ‘என்டிடிவி உலக உச்சநிலை மாநாடு 2026’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், இரு நாடுகளுக்கு இடையிலான தற்போதைய உறவுகள், எல்லை நிலவரம் குறித்து விரிவாகப் பேசினார்.
இரண்டு பெரிய நாடுகள், அதுவும் அண்டை நாடுகளாக இருக்கும்போது அவர்களுக்கு இடையே சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் என்று சுட்டிக்காட்டிய அவர், நிலைமையை உணர்ந்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றார்.
மேலும், 1980களில் இருந்து எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவதே இரு நாடுகளின் உறவுக்கு அடிப்படையாக இருந்து வந்துள்ளது என்றும் அதற்காகப் பல்வேறு ஒப்பந்தங்களும் நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டு அவை பின்பற்றப்பட்டன என்றும் நினைவுகூர்ந்தார்.
எனினும், 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு எல்லை நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்பட்டதாகவும் இந்த மோதல் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், தூதரக உறவுகள், கலாசாரப் பரிமாற்றங்கள் என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார். எல்லைச் சிக்கலுக்குத் தீர்வு காண்பது குறித்தும் அவர் கருத்துரைத்தார்.
“எல்லைப் பிரச்சினையில் இறுதித் தீர்வு எட்டப்பட வேண்டுமெனில், அது முழு எல்லைப் பகுதியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், ஒரு சுமுகமான முடிவை எட்டுவதற்கு ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குவது அவசியம்,” என்றார் திரு ஜெய்சங்கர்.
கல்வான் சம்பவத்துக்குப் பிறகு உருவான கசப்பான உறவு இரு நாடுகளின் நலனுக்கும் உகந்தது அல்ல என்பதை இருதரப்பும் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கு இடையே சீரான உறவைப் பராமரிப்பதே இருதரப்பு தேசிய நலனுக்கும் நல்லது என்றார்.
அதேசமயம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குச் சற்று காலம் எடுக்கும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
