காவிரித் தண்ணீரைத் திறக்க கர்நாடகா மறுப்பு: தமிழக விவசாயிகள் போராட்டம்

காவிரித் தண்ணீரைத் திறக்க கர்நாடகா மறுப்பு: தமிழக விவசாயிகள் போராட்டம்

2 mins read
95d9eb21-2a61-4629-979c-7efaa40db08d
கர்நாடகாவில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்ததால் அணைகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியது. - கோப்புப் படம்: தினமணி

சென்னை: தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக அரசு அதிகாரிகள், தற்போதைய சூழலில் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறக்கப்பட வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகள் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்கும் நிலவி வருகின்றன.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைகளில் தண்ணீர் வரத்து எதிர்பார்த்த அளவில் இல்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகாவில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்ததால் அணைகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியது.

பருவமழை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், காவிரி படுகைகளில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கர்நாடகாவை நோக்கி பேரணியாய்ச் சென்ற 100க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் புதன்கிழமை (ஜூலை 15) கர்நாடகா மாநில எல்லையை நோக்கி பேரணியாகச் சென்றபோது தமிழக காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தமிழகத்திற்குரிய காவிரி பங்கீட்டுத் தண்ணீரை கர்நாடகா உரிய நேரத்தில் திறக்கவில்லை என தமிழக அரசும், விவசாயிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக விவசாய அமைப்புகள் இணைந்து கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

அதன்படி இரு மாநில எல்லையான ஓசூர் அருகேயுள்ள மூக்காண்டபள்ளியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

அப்போது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் கர்நாடகா அரசு செயல்படுவதாக பேரணிக்குத் தலைமை வகித்த தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி சாடினார்.

கர்நாடக அரசு அம்மாநில அணைகளிலுள்ள தமிழகத்திற்கான காவிரி குடிநீர் பங்கீட்டுத் தண்ணீரைத் திறந்துவிட மறுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் காவிரியை குடிநீர் ஆதாரமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு வேலுசாமி, காவிரி பாசன வசதிகளுடன் விவசாயிகளின் நலன், பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டே போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்