ஆறு மாதங்களில் 1.6 லட்சம் கணக்குகளை நீக்கிய மெட்டா நிறுவனம்

ஆறு மாதங்களில் 1.6 லட்சம் கணக்குகளை நீக்கிய மெட்டா நிறுவனம்

2 mins read
0c8ed95a-d7a2-40c5-a1a7-2dc2470a8d93
இந்த நடவடிக்கை தீவிரமாக அமல்படுத்தப்படுவதை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவிகளோடு கண்காணிக்கப் போவதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்தது. - சித்திரிப்புப் படம்: ஃபார்டியூன்

புதுடெல்லி: கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை நீக்கியது மெட்டா நிறுவனம்.

சிறார்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தும் வகையிலான உள்ளடக்கத்துடன் கூடிய விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அந்நிறுவனம் இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை தீவிரமாக அமல்படுத்தப்படுவதை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவிகளோடு கண்காணிக்கப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

மேற்குறிப்பிட்ட விளம்பரங்கள் குறித்து இந்திய அரசாங்கம் விளக்கம் கேட்டு மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அத்தகைய விளம்பரங்களுடன் தொடர்புள்ள சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை இன்ஸ்டகிராமில் பதிவிட்டதற்காக கடந்த ஆறு மாதங்களில் 1.6 லட்சம் கணக்குகளை நீக்கிவிட்டதாக அந்நிறுவனம் கூறியது.

குழந்தைகளைச் சுரண்டுவது ஒரு கொடுமையான குற்றம் என செவ்வாய்க்கிழமை ஒரு ஊடகப் பதிவில் மெட்டா குறிப்பிட்டது.

இன்ஸ்டகிராம் தளத்தில் மட்டுமன்றி, அதற்கு வெளியேயும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை எதிர்கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

சிறார்கள் இடம்பெறும் குறிப்பிட்ட அந்த விளம்பரங்களை வேண்டுமென்றே இடம்பெறச் செய்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அறவே மறுத்துள்ள மெட்டா நிறுவனம், சிறார்கள் தொடர்பான, சந்தேகத்திற்கிடமான நடத்தையை வெளிப்படுத்தும் கணக்குகளை அடையாளம் காண நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கடந்த ஆண்டு உலக அளவில் நாற்பது லட்சத்திற்கும் அதிகமான அத்தகைய கணக்குகளை நீக்கியதாகவும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றின் உரிமையாளரான அந்த சமூக ஊடக நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு உலக அளவில் 36 மில்லியனுக்கும் அதிகமான சிறார்களைச் சுரண்டும் வகையிலான உள்ளடக்கங்களையும் அது நீக்கியுள்ளது.

அமலாக்க அமைப்புகள், செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், விளம்பரதாரர் கண்காணிப்பு, விதிமீறல் இணைப்புகளைத் தடுத்தல், பரந்த தொழில்நுட்பத் துறை முழுவதும் உளவுத் தகவல்களைப் பகிர்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் பலன் காண முடியும் எனவும் மெட்டா கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்