ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கடன் அட்டை பயன்பாட்டுக்கு புதிய விதிகள்

ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கடன் அட்டை பயன்பாட்டுக்கு புதிய விதிகள்

1 mins read
8168c7c5-e5c8-4bb2-837c-8ed94f4ba83e
கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க ‘பான்’ அட்டை கட்டாயமாகிறது.  - படம்: கார்ட் இன்ஃபே

புதுடெல்லி: இந்தியாவில் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கடன் அட்டை (கிரெடிட் கார்டு) பயன்பாட்டு விதிகளில் புதிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

இனிமேல் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க ‘பான்’ (PAN) அட்டை கட்டாயமாகிறது. பான் அட்டை இல்லாமல் வங்கிகள் விண்ணப்பங்களை ஏற்கமாட்டா.

இதன்மூலம், வங்கிச்செலவுகள் வரி அமைப்புடன் இணைக்கப்பட்டு, போலிக் கணக்குகளும் தவறான பயன்பாடும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ஒரு நிதியாண்டில் கடன் அட்டை மூலம் ரூ.10 லட்சம் அல்லது அதற்குமேல் ரொக்கமற்ற செலவுகள் செய்தால் அந்த விவரங்கள் வங்கி வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கப்படும். ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தாலும் அது கண்காணிக்கப்படும். அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் அனைத்தும் பதிவு செய்யப்படும்.

கடன் அட்டை மூலம் இனிமேல் வருமான வரியும் செலுத்தலாம். எனினும், அதற்கான செயலாக்கக் கட்டணமும் வட்டியும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் கடன் அட்டைகளுக்கும் புதிய விதிமுறைகள் இடம்பெறுகின்றன.

அந்த அட்டை தனிப்பட்ட செலவுக்குப் பயன்படுத்தப்பட்டால், அந்தத் தொகை ஊழியரின் வருமானமாகக் கருதப்படலாம். அதற்கு வரியும் விதிக்கப்படலாம். எனவே, அலுவலகச் செலவுகளையும் தனிப்பட்ட செலவுகளையும் தனித்தனியாகப் பிரிப்பது முக்கியமாகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்குள் வழங்கப்பட்ட கடன் அட்டை அறிக்கையை, பான் அட்டை விண்ணப்பத்திற்கான செல்லுபடியாகும் முகவரிச் சான்றாக வழங்கலாம். இது கூடுதல் ஆவணங்களுக்கான தேவையைக் குறைக்கிறது. இதனால், பான் விண்ணப்பச் செயல்முறை எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்