பெங்களூரு: இந்தியாவின் கணினி அறிவியல் கல்வியின் முன்னோடி பேராசிரியர் வைத்தீஸ்வரன் ராஜாராமன், பெங்களூருவின் டாட்டா நகரில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (நவம்பர் 8), தனது 92வது வயதில் இயற்கை எய்தினார்.
அவர் கற்பித்த மாணவர்களில் டி.சி.எஸ் (TCS) நிறுவனத்தின் முதல் தலைமைச் செயல் அதிகாரி ஃபகிர் சந்த் கோஹ்லி, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி ஆகியோரும் அடங்குவர்.
பேராசிரியர் ராஜாராமன், 1965 ஆம் ஆண்டில் ஐஐடி கான்பூரில் இந்தியாவின் முதல் முறையாக கணினி அறிவியல் கல்வித் திட்டத்தை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம், நாட்டின் தொழில்நுட்பப் புரட்சிக்கு அவர் அடித்தளம் அமைத்தார். 1933 ஆம் ஆண்டில் பிறந்த பேராசிரியர் ராஜாராமன், 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின்
கணினித் துறையை வடிவமைப்பதில் தன்னை அர்ப்பணித்தார். பேராசிரியர் ராஜாராமனை நினைவுகூர்ந்து நாராயண மூர்த்தி,, “நான் அறுபதுகளின் பிற்பகுதியில் ஐஐடி கான்பூரில் அவரது மாணவனாக இருந்தேன். அவர் ஓர் அறிஞர் மட்டுமின்றி, நல்ல பண்பாளரும்கூட. எந்த வழிகாட்டுதலுக்கும் அவர் எப்போதுமே தயாராக இருப்பார்” என்று கூறினார்.
பேராசிரியர் ராஜாராமன், 1982 முதல் 1994 வரை இந்திய அறிவியல் கழகத்தின் கணினி கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்தபோது, இந்தியாவின் மீக்கணினி (Supercomputing), இணை கணினி திறன்களை (Parallel computing) மேம்படுத்தி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தார்.

