புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்கு மேலும் வலுவூட்டும் வகையில், பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான ‘ரஃபேல் மெரைன்’ (Rafale Marine) போர் விமானம், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ விமானம் தாங்கிப் போர்க்கப்பலில் முதன்முறையாக வெற்றிகரமாகத் தரையிறங்கிச் சாதனை படைத்துள்ளது.
முதல் முயற்சியிலேயே வெற்றி
கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 29) அன்று கோவா கடற்பகுதியில் நடைபெற்ற அந்தச் சோதனையின்போது, ரஃபேல் மெரைன் போர் விமானம் எந்தவிதச் சிக்கலுமின்றி முதல் முயற்சியிலேயே ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் தரையிறங்கியது.
கடற்படையில் அதிகாரபூர்வமாகச் சேர்ப்பதற்கு முன்னதாக, கப்பலின் சில முக்கியமான அமைப்புகளுடன் அந்த விமானம் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதை ஆய்வு செய்யவே சோதனை நடத்தப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் காணொளியை இந்தியக் கடற்படை தனது அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பிரான்சின் ‘டாசால்ட் ஏவியேஷன்’ (Dassault Aviation) நிறுவனத்திடம் இருந்து ஏறக்குறைய 26 ரஃபேல் மெரைன் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தச் சோதனை வெற்றி கடற்படைக்கு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ரஃபேல் மெரைனின் சிறப்பம்சங்கள்
தரைப்படைப் பயன்பாட்டில் உள்ள ரஃபேல் விமானங்களைவிடக் கடற்படைப் பயன்பாட்டிற்கான ‘ரஃபேல்-எம்’ பல்வேறு கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது.
போர்க்கப்பலில் தரையிறங்கும் அதிர்வைத் தாங்க அதன் சக்கரங்கள், தரையிறங்கும் பகுதிகள் கூடுதல் பலத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கப்பலின் தளத்தில் உள்ள கயிறுகளைப் பிடித்து வேகத்தைக் குறைக்க உதவும் ‘அரெஸ்டர் ஹூக்’ வசதி இதில் உள்ளது.
மெட்டயார் (Meteor), ஸ்கால்ப் (Scalp) போன்ற சக்திவாய்ந்த ஏவுகணைகளைச் சுமந்துசென்று எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன்கொண்டது.
எதிர்வரும் 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த அதிநவீன போர் விமானங்கள் இந்தியக் கடற்படையில் முழுமையாக இணையவுள்ளன. இந்த இணைப்பு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
