அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு தொடர்பான புகாரைத் தொடர்ந்து, கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் பதவி விலகியுள்ளனர். தற்காலிக பொதுச் செயலாளராக கிருஷ்ண மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோயில் நிதி விவரங்களை அறக்கட்டளை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் கிடைக்கப்பெற்ற ரூ.3,264 கோடியில், ரூ.2,370 கோடி கோவில் கட்டுமானப் பணிகளுக்கும் மூலதனச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2026 மார்ச் 31ஆம் தேதி வரை காணிக்கையாகக் கிடைத்த ரூ.582 கோடியில் ரூ.391 கோடி நடைமுறைச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, மீதி வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வழங்கிய வெள்ளிப் பொருள்கள் உருக்கப்பட்டு, பாளங்களாக பாதுகாக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நிர்வாகத்தை வலுப்படுத்தவும், புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்ந்தெடுக்கவும் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தாங்கள் வழங்கிய ரொக்கம், காணிக்கையின் பயன்பாட்டை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று சரிபார்க்கலாம் என்று அறக்கட்டளை அறிவித்துள்ளது.
திருடிய பணத்தில் ஆடம்பர வாழ்க்கை, வங்கி ஊழியர் வாக்குமூலம்
நன்கொடை முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள எட்டுப் பேரில் ஒருவரான அவினாஷ் சுக்லா, திருடிய பணத்தில் தனது குடும்பத்தினர், நண்பர்கள், காதலிக்கு ஆடம்பரப் பரிசுகளை வாங்கியதாக காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி தற்காலிக ஊழியர் அவினாஷ், கிட்டத்தட்ட ரூ.19 லட்சத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்குச் செலவழித்துள்ளார். ரூ.3.5 லட்சம் மதிப்பில் மாருதி கார் வாங்கியுள்ளார். காதலியின் வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம் போட்டதுடன் அவருக்கு ஐபோன் ஒன்றையும் வழங்கியுள்ளார். ஒரு சகோதரனின் திருமணத்திற்கு ரூ.6 லட்சமும் மற்றொரு சகோதரனுக்கு ரூ.5 முதல் 6 லட்சம் வரை ரொக்கமும் கொடுத்துள்ளார்.
சோதனையில் அவினாஷிடமிருந்து ரூ.20.39 லட்சம் ரொக்கம், 1,121 அமெரிக்க டாலர், தங்கம், வெள்ளி நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

