புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எரிசக்தி இறக்குமதி கொள்கையில் மாற்றம் ஏதும் செய்ய முடியாது என்றும் இந்தியா கூறியது.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தம்மிடம் உறுதி அளித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதாக அமெரிக்கா கூறி வருகிறது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக, ரஷ்ய எண்ணெய்யைத் தவிர்க்கும்படி சீனாவிடமும் கோரப்படும் என்றார் அதிபர் டிரம்ப்.
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், நிலையற்ற எரிசக்தி சூழலில், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் நிலையான முன்னுரிமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா உலகளவில் குறிப்பிடத்தக்க இடம் வகித்து வருகிறது என்றும் இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்தியாவின் இறக்குமதிக் கொள்கைகள் முழுமையாக வழி நடத்தப்படுகின்றன என்றும் வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
எனவே, அத்தகைய முன்னுரிமை, இறக்குமதிக் கொள்கைகளில் மாற்றம் செய்ய முடியாது எனவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளான நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வதே எங்களின் முன்னுரிமை.
“அமெரிக்கா உடனான எரிசக்தி கொள்முதலைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக விரிவுபடுத்த முயன்று வருகிறோம். அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளாக சீரான வகையில் இது முன்னேற்றம் கண்டு வருகிறது,” என இந்திய வெளியுறவு அமைச்சு விளக்கம் அளித்திருக்கிறது.
அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், இந்தியாவுடனான எரிசக்தி ஒப்பந்தத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.