பள்ளி, கல்லூரிகளில் விண்வெளி ஆய்வகங்கள்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு

பள்ளி, கல்லூரிகளில் விண்வெளி ஆய்வகங்கள்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு

1 mins read
2cc2ea67-2589-4576-8def-e21ff97e98f9
பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் தொடா்பாக ஆலோசனை நடத்திய மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங். - படம்: ஊடகம்

புதுடெல்லி: மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில், பள்ளி, பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்களை அமைப்பது தொடர்பாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

முதற்கட்டமாக நாடு முழுவதும் ஏழு ஆய்வகங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், செயற்கைக்கோள், ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த அறிவை அடிமட்ட அளவில் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பேசிய மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய விண்வெளித் துறையில் ஏறக்குறைய ரூ.5,600 கோடி மதிப்பிலான தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த வேகமான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இளையர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அதற்கு கல்வி நிறுவனங்களில் அமைய உள்ள இந்த ஆய்வகங்கள் வலுவான அடித்தளமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், விண்வெளித் துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் காரணமாக, தனியார் புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 2019ல் ஒற்றை இலக்கத்தில் இருந்து தற்போது 2026ஆம் ஆண்டில் 400ஆக அதிகரித்துள்ளது.

ஏவுகலன் தயாரிப்பு, செயற்கைக்கோள் வடிவமைப்பில் ஈடுபட்டு வரும் இத்தகைய நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.500 கோடியில் தொழில்நுட்ப நிதி உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 900 பேருக்குத் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் விளக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்