ஈராண்டுக்குமுன் வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்றபோது கீழே விழுந்த 71 வயது வசந்தா கிருஷ்ணனுக்கு முதுகில் அடிபட்டது. அப்போது அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. மருத்துவரிடமும் செல்லவில்லை.
ஆனால், நாளடைவில் வலி அதிகமாகி, கடந்த அக்டோபரில் அவர் நடக்கக்கூட முடியாமல் மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அதைத் தொடர்ந்து சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
“இனி என்னால் நடக்கமுடியுமோ என பயந்தேன். நான் மிகவும் சுறுசுறுப்பானவள். அடிக்கடி பல நிகழ்ச்சிகளுக்கும் வெளியூர்ப் பயணங்களுக்கும் செல்வேன். என் பேரப்பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன்,” என நினைவுகூர்ந்தார் முன்பு பாலர்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிய வசந்தா.
இவ்வாண்டு ஜூன் மாதம் அவர் கேன்பராவிலுள்ள ‘பிலோசம் சீட்ஸ்’ துடிப்புடன் மூப்படைதல் நிலையத்துக்கு அறிமுகமானார். அங்குள்ள ‘ஜிம்டானிக்’ உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்ததும் அவர் நிலையில் முன்னேற்றம் இருந்ததை உணர்ந்தார்.
“கடந்த மாதம் முதல் கைத்தடி ஊன்றாமல் என்னால் நடக்க முடிகிறது.
“உடற்பயிற்சிக்கூடத்திலுள்ள இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவுமூலம் நம் ஆற்றலை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் உடற்பயிற்சியின் கடினத்தன்மையை மாற்ற வாய்ப்பளிக்கின்றன; உடலுறுதியை மேம்படுத்துகின்றன,” என்றார் வசந்தா.
முட்டிவலியால் பாதிப்படைந்த அவருடைய கணவர் ராஜேந்திரனையும் இந்நிலையத்துக்கு அழைத்துவந்தார் வசந்தா. தம்பதியர் வாரத்திற்கு இருமுறை ‘ஜிம்டானிக்’ என்ற இடத்திற்குச் சென்று, அதனால் கிடைக்கும் பலன்களில் மகிழ்கின்றனர்.
இவர்களைப் போல, முதியோர் பலரையும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொண்டுவருகிறது ‘பிலோசம் சீட்ஸ்’.
தொடர்புடைய செய்திகள்
சனிக்கிழமை டிசம்பர் 21ஆம் தேதியன்று ‘பிலோசம் சீட்ஸ்’, ‘யுபிஎஸ்’ (UPS) தளவாட நிறுவனம், மக்கள் கழகம் இணைந்து 200க்கும் மேற்பட்ட முதியோருடன் கிறிஸ்துமசையும் சீனப் பண்டிகையான குளிர்காலச் சங்கராந்தியையும் கொண்டாடின.
நிகழ்ச்சியில், பிலோசம் சீட்சுக்கு 11,000 வெள்ளி காசோலையை வழங்கியது ‘யுபிஎஸ்’ நிறுவனம். இந்நிதி, ‘யுபிஎஸ்’ நிறுவனத்தில் பணியாற்றுவோரிடமிருந்து திரட்டப்பட்டது. மேலும், அந்நிறுவனத்தினர் முதியோருக்காக மதிய உணவைச் சமைத்ததோடு, அன்பளிப்புப் பைகளையும் வழங்கினர். 50 ‘யுபிஎஸ்’ தொண்டூழியர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஈடுபட்டனர்.
2023 டிசம்பரில் ‘யுபிஎஸ்’ தொடங்கிய ‘லிவ்இட்அப்சீனியர்ஸ்’ (LIVEITUPSeniors) திட்டம், கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி ஈஸ்ட் கேன்பராவில் முதியோர் கொண்ட 138 குடும்பங்களைச் சென்றடைந்துள்ளது. அதன்பின் இரு முறை, செம்பவாங் சென்ட்ரலிலுள்ள முதியோரின் தேவைகளைக் கண்டறிய ‘யுபிஎஸ்’ தொண்டூழியர்கள் வீடு வீடாகச் சென்று நலம் விசாரித்தனர்.
சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் ஓங் யி காங், அரசாங்கத்துக்கும் சமூகத்துக்கும் இடையேயான இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
“தீவுமுழுதும் முதியோரது வீட்டுக்கு 400 மீட்டர் தூரம் சுற்றளவில் துடிப்புடன் மூப்படைதல் நிலையம் ஒன்றை நிறுவுவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டிருந்தாலும் வட்டாரத்தில் நடந்தபோதுதான் 400 மீட்டர் என்பது வெகுதூரம் என உணர்ந்தேன். அதனால் வீடுகளின் அருகே இத்தகைய சேவைகளை வழங்க, குடியிருப்பாளர் நிலையங்களின் உதவியையும் நாடினோம்,” என்றார் அமைச்சர் ஓங்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் வாழும் முதியோரின் விவரங்கள், தேவைகள் ஆகியவற்றைப் பதிவுசெய்வதும், அடிக்கடி அவர்களின் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரிப்பதும் முக்கியம் என அவர் கூறினார்.
முதியோர் பலரும் தாங்களே முன்வந்து தொண்டூழியர்களாகச் செயல்படுகின்றனர். மக்கள் கழகம், ‘பிலோசம் சீட்ஸ்’ போன்ற அமைப்புகளில் 73 வயது தெய்வானை பழனி அனந்தன் தொண்டூழியம் புரிந்துவருகிறார்.
“பிலோசம் சீட்ஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் முதியோருக்குத் தனிப்பட்ட முறையில் கவனமும் கொடுக்கிறார்கள்,” என அவர் பாராட்டினார்.