மனிதர்களின் உடல்நலனை ஆராய எத்தனையோ வழிகளை மருத்துவர்கள் கைவசம் வைத்துள்ளனர். அந்தப் பட்டியலில், தூக்கத்தைப் பதிவுசெய்யும் முறை தற்போது இணைந்துள்ளது.
தனிநபர் ஒருவரின் தூங்கும் முறையைப் பதிவுசெய்வதன் மூலம் எதிர்காலத்தில் அவருக்கு ஏற்படக்கூடிய சுகாதாரச் சிக்கல்களை அடையாளம் காண முடியும் என்று நேச்சர் மெடிசன் என்ற மருத்துவ சஞ்சிகையின் ஆய்வு தெரிவித்துள்ளது.
மாரடைப்பு, மறதிநோய் போன்ற எதிர்காலப் பிரச்சினைகளையும் கூட ஒருவர் தூங்கும் முறையைக் கண்காணிப்பதன் மூலம் கண்டறிய முடியும் என்று ஆய்வு கூறுகிறது.
நோய் முன்கணிப்புக்கான தூக்க அடிப்படை மாதிரி என்ற தலைப்பிலான அந்த ஆய்வில், ‘ஸ்லீப் எஃப்எம்’ என்ற செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்கப்பட்டது.
அந்த மாதிரிக்கு ஏறத்தாழ 65,000 பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட 585,000க்கும் அதிகமான மணிநேர தூக்கப் பதிவுகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அது மறதிநோய், இதய செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய் உட்பட 130 விதமான உடல்நலக் குறைபாடுகள் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான அபாயங்களுடன் தொடர்புடைய வடிவங்களைக் கண்டறிகிறது.
தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடங்கல்கள், உயிர்வாயு அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், இதயத் துடிப்பு திடீரென அதிகரிப்பது போன்ற மாற்றங்கள், சுவாச அடைப்பு தூக்கக் கோளாறு போன்ற மறைமுகப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டக்கூடும் என்று தலையீட்டு இதயவியல் ஆலோசக மருத்துவரான சிராக் டி. கூறுகிறார்.
“தனிப்பட்ட அளவீடுகள் சாதாரணமாகத் தெரிந்தாலும்கூட, செயற்கை நுண்ணறிவுடன் பல்வேறு தரவு ஓட்டங்களை இணைக்கும்போது, ஒருவருக்கு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கும் வடிவங்களை அதனால் கண்டறிய முடியும்,” என்றார் அவர்.
‘ஸ்லீப் அப்னியா’ உடலின் அழுத்த எதிர்வினையைத் தூண்டி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதே வேளை, இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றங்கள் தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கக்கூடும். இருப்பினும், அத்தகைய மாற்றங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நோய் தீவிரமடைந்து வருவதை மட்டுமே குறிக்காது என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.
புள்ளியியல் ரீதியான தொடர்புகளைக் கண்டறிவதற்கும் ஒரு தனிநபரின் எதிர்கால ஆரோக்கியத்தைத் துல்லியமாகக் கணிப்பதற்கும் இடையே வேறுபாடு உள்ளது என்று நுரையீரல் மருத்துவ ஆலோசகர் மஜீத் பாஷா குறிப்பிட்டார்.
வேலை நேரம், சமூகப் பொருளியல் சூழல், வாழ்க்கை முறை, கலாசாரப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப தூக்கத்தின் வடிவங்கள் மாறுபடுவதால், இந்தியத் தூக்க ஆய்வகத் தரவுகளைக் கொண்டு அதற்குத் தனிப்பட்ட முறையில் மறுமதிப்பீட்டையும் சரிபார்ப்பதையும் மேற்கொள்வது முக்கியம் என்றார் அவர்.
மேலும், அந்த மாதிரியானது பல்வேறு மக்கள்தொகைப் பிரிவுகளிலும் மருத்துவ அமைப்புகளிலும் சோதிக்கப்பட வேண்டும் என்றும் கூடுதல் சோதனைகள், சிகிச்சை தொடர்பான முடிவுகளைத் தொடர்ந்து மருத்துவர்களே வழிநடத்த வேண்டும் என்றும் டாக்டர் பாஷா முன்வைத்தார்.
அடிக்கடி விழிப்பது, தூக்க சுழற்சிகளில் ஏற்படும் மாற்றங்கள், மூளை அலைகளின் செயல்பாட்டில் ஏற்படும் மாறுபாடுகள் ஆகியவை ‘அல்சைமர்’ போன்ற நரம்புச் சிதைவு நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளனவா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக நரம்பியல் முதன்மை ஆலோசகர் மருத்துவர் பி. கே. மதுசூதன் தெரிவித்தார்.
இருப்பினும், தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மறதி நோய் அபாயத்தை முழுமையாக உறுதிப்படுத்திவிட முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
