மீள்திறன் மிக்க வாழ்வில் கொண்டாட்டம் நிறைந்த ஓய்வுக்காலம்

6 mins read
c74b2cbb-9b8c-4f0d-92e9-eaaf268a2983
நடந்து விளையாடும் காற்பந்தாட்ட விளையாட்டில் சக மூத்தோருடன் ஈடுபடும் திரு ஹர்பன்ஸ் சிங், 76 (வலக்கோடி). - படம்: என்டியுசி ஹெல்த் அமைப்பின் துடிப்பாக மூப்படைதல் நிலையம் (ஆக்டிவ் ஏஜிங் சென்டர் (ஏஏசி)) புக்கிட் மேரா வியூ.

பல ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்ட பணிகளிலிருந்து விலகி, புதிய சவால்களை எதிர்கொள்ளவும், வாழ்க்கையை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகுவதற்குமானது ஓய்வுக்காலம்.

கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் நெடுங்காலம் பணியாற்றியபோதிலும் அவர்களது பயணம் அத்துடன் முடிவடைவதில்லை.

வாழ்நாள் முழுதும் செலுத்திய கடின உழைப்பு, சுகாதாரம், சமூக சேவை, நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த மனநிறைவுடன் ஓய்வுக்காலத்தைக் கழிப்பவர் ஹர்பன்ஸ் சிங்.

குறிப்பாக திரு சிங் தமது ஓய்வுக்காலம் என்பது சுகாதாரப் பராமரிப்பை அரவணைக்கவும் சமூகத்திற்குச் சேவை செய்யவும் தக்க தருணமாகக் கருதுகிறார்.

“எப்போதும் சுறுசுறுப்பாகவும், செயல்பாட்டுடனும் இருப்பது வாழ்வின் மதிப்பைக் கூட்டுகிறது. உடலிலும் மனத்திலும் புத்துணர்வு குறைந்தால் நடப்பது, ஆடை அணிவது, உண்பது போன்ற அன்றாட செயல்களில் தொய்வு ஏற்பட்டு வாழ்வில் விரக்தி ஏற்படும்,” என்றார் திரு சிங்.

கடின உழைப்பு நிறைந்த பயணம்

மூத்தோர் பலரும் பொதுச் சேவை, வணிகம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல காலம் கடின உழைப்பைச் செலுத்தியதன்மூலம் சிங்கப்பூரின் வளார்ச்சிக்கும் செழிப்பிற்கும் பெரும் பங்காற்றியுள்ளனர்.

ஹர்பன்ஸ் சிங்கின் கதை கடின உழைப்புக்கும் மீள்திறனுக்கும் சான்றாக அமைந்துள்ளது. ஹர்பன்ஸ் தனது 11 வயதில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். முற்றிலும் புதிய நாட்டிற்கு வந்து அக்கலாசாரத்தைக் கற்று, ஏற்றுக்கொண்டதுடன் நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள அரும்பாடுபட்டார். கல்வி, பணி என ஆண்டுகள் உருண்டோட, தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக்கொண்ட இவர், சிங்கப்பூர்த் துறைமுக ஆணையக் (PSA) காவல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். அவரது பணி, பன்முகத்தன்மை நிறைந்த பயணமாக இருந்தது.

45 ஆண்டுகால தொடர் சேவைக்குப் பின் 2017ஆம் ஆண்டில் வலுவான பொருளாதார நிலைத்தன்மையுடனும் இடையிடையே ஏற்பட்ட ஆரோக்கியச் சவால்களைச் சமாளித்தும், மன நிறைவுடனும் ஓய்வு பெற்றார் ஹர்பன்ஸ்.

“ஓய்வு பெற்ற பின்பு உடல் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க விரும்பினேன். என்னை நானே கவனித்துக்கொள்வதுடன் என் குடும்பத்தினர், நண்பர்களுக்குப் பயனுள்ள விதத்திலும், சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வண்ணமும் செயல்படுகிறேன்,” என்றார் அவர்.

சுறுசுறுப்புடனும் சமூகத்தில் ஈடுபாட்டுடனும் இருப்பதன் முக்கியத்துவம்

தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை பணியிலேயே செலவழித்த மூத்தோர், அவர்களது முதுமைக்காலத்தில் உடல்நலனில் அக்கறை செலுத்துவது முக்கியம்.

ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் அனுபவிக்க உடலும் மனதும் நல்ல நிலையில் இருப்பது அவசியம். எனவே ஹர்பன்ஸ் சுறுசுறுப்பாக இருப்பதை ஓய்வுக்கால வாழ்வின் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளார்.

76 வயதானாலும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முழங்கால் வலியால் அவதிப்பட்டாலும், தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் இவர்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க, உடலியக்க மருத்துவர் கற்பித்த எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவரது உடல் இயக்கத்தை மேம்படுத்தியுள்ளது.

நடந்து விளையாடும் காற்பந்தாட்ட விளையாட்டில் சக மூத்தோருடன் ஈடுபடும் திரு ஹர்பன்ஸ் சிங், 76 (வலக்கோடி).
நடந்து விளையாடும் காற்பந்தாட்ட விளையாட்டில் சக மூத்தோருடன் ஈடுபடும் திரு ஹர்பன்ஸ் சிங், 76 (வலக்கோடி). - படம்: என்டியுசி ஹெல்த் அமைப்பின் துடிப்பாக மூப்படைதல் நிலையம் (ஆக்டிவ் ஏஜிங் சென்டர் (ஏஏசி)) புக்கிட் மேரா வியூ.

புக்கிட் மேரா வியூ பகுதியிலுள்ள என்டியுசி ஹெல்த் அமைப்பின் துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் (ஆக்டிவ் ஏஜிங் சென்டர் (ஏஏசி)), நடந்து விளையாடும் காற்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபடுகிறார். சமூகத்திலுள்ள பிறருடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொள்கிறார். இது உடலை வலுப்படுத்துவதுடன், பிறருடனான நல்லுறவுகளையும் வலுப்படுத்துகிறது.

“முழங்கால் வலி இருந்தாலும், நடைபயிற்சி மேற்கொள்கிறேன், சுறுசுறுப்பாக இருக்கிறேன். இது எனக்கு புத்துணர்வளித்து, பிறருடன் பழக வாய்ப்பு ஏற்படுத்துகிறது. முக்கியமாக, என்னைக் குறித்த நல்ல உணர்வு எனக்கு ஏற்படுகிறது,” என்று தெரிவித்தார்.

ஹர்பன்ஸ் சமூகத்திலுள்ள சக மூத்தோர் சுறுசுறுப்பாக இயங்க தொடர்ந்து ஊக்குவிக்கிறார். குழு நடவடிக்கைகளில் ஈடுபடவும், சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஊக்கப்படுத்துகிறார். சமூகத்துடனான தொடர்பு, தனிமையாக உணர்வதைத் தடுத்து, மனநலனை மேம்படுத்துகிறது எனவும் இவர் நம்புகிறார்.

ஓய்வுக்காலத்தில் முன்கூட்டிய சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளில் அக்கறை

ஓய்வுக்காலம் முழுதும் ஹர்பன்ஸின் உடல்நலனை நன்முறையில் பராமரிப்பதில் தொடக்கத்திலிருந்தே சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

அவர் தனிப்பட்ட முறையில் முன்கூட்டியே சுகாதாரப் பராமரிப்பு வழங்குவதில் கவனம் செலுத்தும் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தில் இணைந்துள்ளார். இதன்மூலம் தனது மருத்துவ நிலைகள் குறித்து நன்கு அறிந்த மருத்துவப் பராமரிப்புக் குழுவின் தொடர் ஆதரவைப் பெற்று வருகிறார்.

முதுமையில் வரும் உடல் பிரச்சினைகள் வாழ்வின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறார் திரு ஹர்பன்ஸ் சிங்.
முதுமையில் வரும் உடல் பிரச்சினைகள் வாழ்வின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறார் திரு ஹர்பன்ஸ் சிங். - படம்: என்டியுசி ஹெல்த் அமைப்பின் துடிப்பாக மூப்படைதல் நிலையம் (ஆக்டிவ் ஏஜிங் சென்டர் (ஏஏசி)) புக்கிட் மேரா வியூ.

முன்னோடித் தலைமுறை அட்டை வைத்திருப்பதால் வழக்கமான பரிசோதனைகளுடன் நீண்டகால நோய் நிர்வகிப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெறுகிறார் இவர். மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டம்மூலம் முழங்கால் வலியைச் சமாளிக்க உதவும் பிசியோதெரபி சிகிச்சைப் பரிந்துரைகள், நடமாட்டத்துடன் இருப்பதற்கான ஆதரவு ஆகியவற்றைப் பெறுகிறார்.

“நம்மை நன்கறிந்த மருத்துவர்கள் தொடர்ந்து நம்மைக் கவனிப்பதுடன் தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். இதைவிடச் சிறந்த அனுபவம் இருக்க முடியாது,” என்று தன் மனைவியிடம் சொன்னதாக அவர் தெரிவித்தார்.

ஹர்பன்ஸைப் பொறுத்தவரை, இது நிதி ஆதரவைக் காட்டிலும் ஆரோக்கியத்தைக் குறித்ததாகும். மருத்துவர்களும், அவர்களது குழுவினரும் அவர்மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளனர். அவர் சரியான வாழ்வியலைக் கடைபிடிப்பதையும், அவரது உடல்நல இலக்குகள் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதிசெய்கின்றனர் குழுவினர்.

“இது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. மருத்துவப் பராமரிப்புக் குழு, உடல் நிலை குறித்தும் சிகி‌‌ச்சை குறித்தும் அவசரமாக முடிவெடுக்காமல், எது சிறந்தது என்பதில் அக்கறை செலுத்தி, அது சிறப்பாகச் செயல்படுவதையும் உறுதிசெய்கிறது,” என்று மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தின்மூலம் தான் பெற்றுவரும் அனுகூலங்களை விளக்கினார் ஹர்பன்ஸ்.

பணியைத் தாண்டிய வாழ்க்கை: ஓய்வுக்கால அனுபவம் 

பணியில் செலுத்திய உழைப்பின் பலனைப் பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடனான அர்த்தமுள்ள உறவுகள்மூலம் அனுபவிக்கிறார் ஹர்பன்ஸ். இதர மூத்தோரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உறவாட ஊக்குவித்து வருகிறார். இப்போது அவரது வாழ்வில் அன்பும், சிரிப்பும், பகிர்வும் நிறைந்துள்ளது.

“எனக்கு இரு மகன்கள், மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்கள் என்னுடன் வசிப்பது, அவர்களுடன் உணவைப் பகிர்வது, மகிழ்ச்சியான தருணங்களில் இணைந்திருப்பது ஆகியவை மகிழ்ச்சியளிக்கின்றன,” எனச் சொன்னார் அவர்.

சமூகத் தொடர்புகளின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் உணர்ந்துள்ள திரு ஹர்பன்ஸ் சிங் (இடக்கோடி), குழு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன்மூலம் உடலையும் மனத்தையும் சுறுசுறுப்பாக வைத்துள்ளார்.
சமூகத் தொடர்புகளின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் உணர்ந்துள்ள திரு ஹர்பன்ஸ் சிங் (இடக்கோடி), குழு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன்மூலம் உடலையும் மனத்தையும் சுறுசுறுப்பாக வைத்துள்ளார். - படம்: என்டியுசி ஹெல்த் அமைப்பின் துடிப்பாக மூப்படைதல் நிலையம் (ஆக்டிவ் ஏஜிங் சென்டர் (ஏஏசி)) புக்கிட் மேரா வியூ.

சமூகத் தொடர்புகளின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் அவர் உணர்ந்துள்ளார். சமூகத்தில் முக்கியப் பங்காற்றிவரும் இவர், குழு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன்மூலம் உடலையும் மனத்தையும் சுறுசுறுப்பாக வைத்துள்ளார். துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் ஈடுபடுவதைத் தாண்டி, கோவில்களில் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்று தொண்டூழியம் செய்வது, இன, சமய நல்லிணக்கம் தொடர்பான முன்னெடுப்புகளில் பங்காற்றுவது உள்ளிட்டவற்றில் தொடர்ந்து ஈடுபடுவதுடன் பிறரையும் ஈடுபட ஊக்குவிக்கிறார் ஹர்பன்ஸ்.

“நான் பல சவால்களை எதிர்கொண்டு போராடும் நபர்களைச் சந்திக்கிறேன். அவர்களிடமெல்லாம், வீட்டில் அடைந்து தனிமையில் வாடாமல், வெளியில் சென்று சமூகத்தில் ஈடுபடச் சொல்கிறேன்,” என்றார்.

முதுமையில் சவால்களை எதிர்கொள்வது

முதுமைக்காலம் சவால்கள் நிறைந்ததாக அமையலாம். ஹர்பன்ஸ் அதற்கு விதிவிலக்கல்ல. பல மூத்தோரைப் போலவே இவரும் செவித்திறன் குறைபாடு, முழங்கால் வலி உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளை எதிர்கொள்கிறார். மருத்துவ ஆலோசனையுடனும், சமூக ஈடுபாட்டின் மூலமும் அவற்றைச் சமாளித்து வருகிறார். முதுமையில் வரும் உடல் பிரச்சினைகள் வாழ்வின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறார் ஹர்பன்ஸ்.

“உடல்நலம் மிகவும் முக்கியமானது. எவ்வளவு பணம் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் அதை அனுபவிக்க இயலாமல் போகும்,” என்று எடுத்துரைத்தார் அவர்.

சமூகத்துடனான தொடர்பு, தனிமையாக உணர்வதைத் தடுத்து, மனநலனை மேம்படுத்துகிறது என்று திரு ஹர்பன்ஸ் சிங் நம்புகிறார்.
சமூகத்துடனான தொடர்பு, தனிமையாக உணர்வதைத் தடுத்து, மனநலனை மேம்படுத்துகிறது என்று திரு ஹர்பன்ஸ் சிங் நம்புகிறார். - படம்: என்டியுசி ஹெல்த் அமைப்பின் துடிப்பாக மூப்படைதல் நிலையம் (ஆக்டிவ் ஏஜிங் சென்டர் (ஏஏசி)) புக்கிட் மேரா வியூ.

முதுமைக்காலத்தில் வரும் சவால்களை முறியடித்து ஓய்வுக்கால வாழ்வை நிறைவாக மாற்றியமைத்துக்கொள்ளமுடியும் என்பதற்கு ஹர்பன்ஸ் போன்ற மூத்தோர் சான்றாக விளங்குகின்றனர்.

முன்கூட்டிய சுகாதாரப் பராமரிப்பு, குடும்பம், நண்பர்களுடன் இணைந்திருத்தல், சமூக ஈடுபாடு உள்ளிட்டவைமூலம் ஓய்வுக்கால வாழ்வை அர்த்தமுள்ளதாகத் தொடரலாம் என்பதையும் இவர்கள் நிரூபிக்கின்றனர்.

“நம்மிடம் என்ன இருக்கிறது என்பதைத் தாண்டி, அதை வைத்து என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே வாழ்வின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக இருங்கள், சமூகத்தில் ஈடுபாடு செலுத்துங்கள். சிறு செயல்களில் மகிழ்ச்சி பெறுங்கள்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

மூத்தோர், ஓய்வுக்கால வாழ்வில் அமைதி பெறுவது எவ்வாறு என்பதையும், வாழ்வை நிறைவாக அனுபவிப்பது எவ்வாறு என்பதையும் இந்த இணைப்பின்வழியே தெரிந்துகொள்ளலாம்.

மேலும் சிங்கப்பூரைச் சுற்றிய பல்வேறு இடங்களில் நடைபெறும் ‘Together, for Better’ சாலைக்காட்சியில் பங்கேற்று துடிப்பான மூப்படைதல் பயணத்தைத் தொடங்கலாம். உங்கள் அருகில் எங்கு சாலைக்காட்சி நடைபெறுகிறது என்பதை இந்த இணைப்பில் அறியுங்கள்.

-
இந்தச் செய்தியை தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு உங்களுக்குக் கொண்டுவருகிறது. 
குறிப்புச் சொற்கள்