தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுநீரக நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தொண்டு நடை

2 mins read
14f32f23-adc8-4e13-adab-c49c50125ce3
சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் ‘காட் டு வாக்’ நடை நிகழ்ச்சியில் இவ்வாண்டு ஏறக்குறைய 5,000 பேர் பங்கேற்றனர். - படம்: சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனம்
multi-img1 of 3

சிறுநீரக நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் பொதுமக்‌களிடையே சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனம் (Kidney Dialysis Foundation) ஆண்டுதோறும் ‘காட் டு வாக்’ (Got to Walk) எனும் நடை நிகழ்ச்சியை நடத்திவருகிறது.

சனிக்‌கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற இவ்வாண்டின் நடை நிகழ்ச்சியில் பங்கேற்க ஏறக்குறைய 5,000 பேர் சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் திரண்டிருந்தனர்.

‘நீரிழிவு நோயை வென்று உங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாத்திடுங்கள்’ (Beat Diabetes, Protect Your Kidneys) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறுநீரக நோயாளிகளுக்கான உயிர்காக்கும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சைகளுக்கு நிதியளிக்க, கிட்டத்தட்ட $1 மில்லியன் திரட்டப்பட்டது.

சிங்கப்பூர் மக்கள்தொகையில் 14 விழுக்காட்டினர் சிறுநீரக நோய்க்கு ஆளாவதாகத் தரவுகள் கூறுகின்றன. அதாவது, ஒவ்வொரு நாளும் புதிதாக ஆறு பேருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு கண்டறியப்படுகிறது. நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு முக்கியக் காரணமான நீரிழிவு நோயைத் தடுப்பதில் இவ்வாண்டின் நடை நிகழ்ச்சி கவனம் செலுத்தியது.

“நீரிழிவு நோயாளிகள் பலர் சிறுநீரகச் செயலிழப்பை எதிர்கொள்ளும் வரை தங்கள் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்பை உணராமல் இருக்‌கிறார்கள்.

“இந்நிகழ்ச்சி, உடல்நலத்தைப் பேணும்படி சிங்கப்பூரர்களுக்கு நினைவுபடுத்தவும் நீரிழிவால் ஏற்படும் சிறுநீரகச் சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுவதுடன் சிறுநீரக நோயாளிகளுக்கு ஆதரவளிக்க அறநிறுவனம் கொண்டுள்ள கடப்பாட்டுக்கும் ஆதரவளிக்கிறது,” என்று சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனத் தலைவர் டாக்டர் லிம் சியோக் பெங் விளக்கினார்.

நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு அரசாங்கம், சமூகக் குழுக்கள், பள்ளிகள், பணியிடங்கள், குடும்பங்கள் என அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் தேவைப்படுவதாக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட் தமது உரையில் சொன்னார்.

நமது உணவு, வாழ்க்கை முறையை மேம்படுத்த, வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளுக்குச் செல்வது, சர்க்கரையையும் உப்பையும் உட்கொள்வதைக் குறைத்துக்கொள்வது, அதிக உடற்பயிற்சி செய்வது போன்ற எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் சீயின் தலைமையில் பங்கேற்பாளர்கள் சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர், அனைவரும் விளையாட்டு நடுவத்தைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் நடைப்பயணத்தை மேற்கொண்டனர்.

உடல்நலம் சார்ந்த விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், அதிர்ஷ்டக் குலுக்கல் போன்றவற்றுடன் கூடிய குடும்பத் திருவிழாவாக நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

“எனது சிறுநீரக நிலையைப் பற்றி முதலில் அறிந்தபோது மிகவும் பயந்தேன்,” என்றார் 2022ஆம் ஆண்டில் சிறுநீரக நோயின் இறுதிக்கட்ட பாதிப்பு குறித்து அறிந்த திரு செல்வராஜா மாயாண்டி, 64.

அதேநேரத்தில் அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்‌கப்பட்டதால் இருவரும் வேலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டதாகச் சொன்ன அவர், சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனத்தின் ஆதரவில்லாமல் தம்மால் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொண்டிருக்க முடியாது என்றார்.

“இந்நிகழ்ச்சிக்‌கு வந்திருந்த அனைவரின் ஆதரவும் எனது மனத்துக்கு மகிழ்ச்சி அளித்தது,” என்று கூறிய செல்வராஜா, ‘காட் டு வாக்’ போன்ற நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்