தனது நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையும் குழந்தைகள் தினத்தையும் கோலாகலமாகக் கொண்டாடியது தாரகை இலக்கிய வட்டம்.
தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16ஆம் தளத்தில் ‘தி போட்’ (The Pod) அரங்கில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தாரகை இலக்கிய வட்டத்தின் புதிய அமைப்புச் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். நிகழ்வின்போது அமைப்பின் புதிய செயலவைக் குழுவும் பொறுப்பேற்றுக்கொண்டது.
சிறந்த பட்டிமன்றப் பேச்சாளருக்கான அவ்வமைப்பு ஆண்டுதோறும் வழங்கிவரும் ‘பட்டிமன்றத் தாரகை’ விருது இம்முறை திருவாட்டி நபிலாவிற்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, தொடக்கநிலை மாணவர்கள் பேச்சாளர்களாகப் பங்கேற்ற ‘பிள்ளை வளர்ப்பில் பெற்றோருக்குப் பெரிதும் கைகொடுப்பது புகழுரைகளா? அறிவுரைகளா?’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தேறியது.
நடுவராக முனைவர் க. இராஜகோபாலன் செயல்பட்டார். ‘புகழுரைகளே’ எனும் அணியின் சார்பில் ரா. கமலிகா, ஜெயபிரகாசம் ஜோஷித், கனிஷ்கா ஆகியோரும் ‘அறிவுரைகளே’ எனும் அணியின் சார்பில் அமிழ்தினி உதயகுமார், மகேஷ்வரன் நிதிஷ் சத்யன், வியாசர்பிரகன் ஆகியோரும் வாதாடினர்.
அத்துடன், குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ‘நான் புத்தகம் பேசுகிறேன்’ எனும் தலைப்பில் தொடக்கநிலை மாணவர்களுக்கான காணொளிப் போட்டி நடத்தப்பட்டது. ஐம்பத்தாறு குழந்தைகள் அதில் கலந்துகொண்டனர். வெற்றியாளர்களுக்குச் சான்றிதழும் பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டன.