கல்லீரல் கொழுப்பைக் கையாள ஒரு மருத்துவரின் உணவுப் பழக்கம்

கல்லீரல் கொழுப்பைக் கையாள ஒரு மருத்துவரின் உணவுப் பழக்கம்

படம்: கேஸ்ட்ரோஹெல்த்

26 Oct 2026 - 6:02 am

2 mins read

புதுடெல்லி: உலகளவில் மில்லியன்கணக்கானோர் கல்லீரல் கொழுப்பால் (fatty liver) பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அதைக் கையாள உணவுப் பழக்கங்கள் எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்பது பலர் அறிவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் உட்கொள்ளும் உணவு கல்லீரல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

கல்லீரல் விவகாரங்களில் நிபுணத்துவ மருத்துவரான ஜோசஃப் சல்ஹாப், கல்லீரல் கொழுப்பைக் கையாள குறிப்பிட்ட சில உணவு வகைகளை உட்கொள்கிறார். அதுபற்றி அவர் பகிர்ந்கொண்டுள்ளார்.

“கல்லீரல் கொழுப்பு என்பது அழற்சி, இன்சுலின் எதிர்ப்பு, ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் ஆகியவை சம்பந்தப்பட்டது. உங்களின் உணவுப் பழக்கங்கள் அந்த முன்று அம்சங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆரோக்கியமான கொழுப்பு (healthy fats), வைட்டமின் சி உள்ளிட்டவை அதிகமாக இருக்கும் உணவு வகைகளை உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க உதவக்கூடும் என்றும் டாக்டர் சல்ஹாப் சொன்னார்.

ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவு

எல்லா வகை கொழுப்பும் கல்லீரலுக்கு அபாயகரமானவை அல்ல என்று டாக்டர் சல்ஹாப் குறிப்பிட்டுள்ளார். ஆரோக்கியமான, நிறைவுறாக் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைத் தான் உட்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ஆலிவ் எண்ணெய், கடலை வகைகள், வெண்ணெய் பழம் (அவக்காடோ) ஆகியவை அத்தகைய உணவு வகைகளில் அடங்கும். இவை கல்லீரல் நன்கு செயல்பட உதவும்.

ஒமேகா-3

கல்லீரல் கொழுப்பை எதிர்க்க ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நன்கு உதவக்கூடும். மெக்கரல், சார்டீன் போன்ற மீன் வகைகளில் இதைப் பெறலாம்.

ஒமெகா-3ன் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து அந்த உணவு வகைகளை உட்கொள்கிறார் டாக்டர் சல்ஹாப்.

வைட்டமின் சி

சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட் உணவு அம்சமான வைட்டமின் சி, கல்லீரல் செயல்பாட்டுக்கு ஆதரவளிக்கும் ஒன்றாகும். அதனால் வைட்டமின் சி உள்ள கீவி, ஆரஞ்சு போன்ற பழங்களை டாக்டர் சல்ஹாப் உண்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு நாளுக்கு ஓர் ஆரஞ்சுப் பழம் உண்டால்கூட போதும்.

கல்லீரலுக்கு உகந்த திரவிய வகைகள்

கல்லீரலுக்கு நன்மையளிக்கும் இரு திரவிய வகைகளை டாக்டர் சல்ஹாப் பரிந்துரைக்கிறார். ஒன்று காப்பி, மற்றொன்று கிரீன் டீ தேநீர் வகை.

கல்லீரல் அணுக்களைப் பாதுகாக்கும் அம்சங்கள் அவற்றில் உள்ளன. அதோடு, அவை கல்லீரல் கொழுப்பைக் குறைக்கவும் வகைசெய்யக்கூடும்.

ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த உணவு

ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வது நல்லது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

அது அதிகம் உள்ள ராஸ்ப்பெரீஸ், புளூபெரீஸ் போன்றவற்றை அவர் உண்கிறார்.

பெரீ பழ வகைகளில் கல்லீரல் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளும் அம்சம் உள்ளது.

இத்தகைய உணவு வகைகளை உட்கொள்வதாக டாக்டர் சல்ஹாப் கூறினார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தின் செய்தித் தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்