இரவில் நேரமும் அளவும் அறிந்து உண்க

இரவில் நேரமும் அளவும் அறிந்து உண்க

படம்: பிக்சாபே

25 Oct 2026 - 8:00 am

3 mins read

நீண்ட வேலை நேரம், போக்குவரத்து நெரிசல், நெடுநேரம் திரையைப் பார்ப்பது போன்ற காரணங்களால் இரவு உணவை தாமதமாக உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

எப்போதாவது தாமதமாக உண்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், நாள்தோறும் இரவில் தாமதமாக, அதிக உணவு உண்பது நீண்டகால அடிப்படையில் உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும்.

இத்தகைய சூழலில், சிறுசிறு மாற்றங்கள் மூலம் உடல்நலத்தைப் பாதுகாக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

முக்கியப் பிரச்சினை

இரவு உணவைத் தாமதமாக உண்பது நேரடியாக நீரிழிவு நோயை உண்டாக்காது என்று சென்னை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகரும் நீரிழிவு வல்லுநருமான டாக்டர் அகிலா மணி கூறுகிறார்.

ஆனால், முறையற்ற உணவுத் தேர்வு, உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை ஆகியவற்றுடன் தொடர்ந்து தாமதமாக உண்பது வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

“இரவு உணவு தாமதமாவது முக்கியப் பிரச்சினை. இரவு 8 மணி என்ற மந்திரக் காலக்கெடு என்பது மட்டுமே அதற்குக் காரணமன்று,” என்கிறார் ‘ரீடயல் கிளினிக்’ நிறுவனர் டாக்டர் ககன்தீப் சிங்.

இரவு 10 அல்லது 11 மணிக்கு மாவுச்சத்து அதிகமுள்ள உணவை உண்பதன்மூலம் உடலின் உணவுச் சாளரம் ஒருபோதும் சரியாக மூடுவதில்லை என்று அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறினார்.

இரவில் வேறு முறையில் உணவைக் கையாளும் உடல்

“மனித உடலில் சர்க்கரையையும் இன்சுலினையும் கையாள்வதைக் கட்டுப்படுத்தும் ‘சர்க்கேடியன் ரிதன்’ எனும் கடிகாரச் சுழற்சி சீர்மை உள்ளது. இரவில் இன்சுலின் உணர்திறன் மிகக் குறைவாக இருக்கும்,” என்கிறார் டாக்டர் அகிலா.

எனவே, இரவில் மாவுச்சத்து அதிகமுள்ள உணவை உண்பது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டும் என்று அவர் எச்சரிக்கிறார்.

பகலில் செரிக்கும் அளவிற்கு இரவில் உடல் உணவைச் செரிப்பதில்லை என்று டாக்டர் ககன்தீப் சிங் கூறுகிறார்.

“உறங்க வேண்டிய நேரத்தில் அதிக உணவு உண்ணும்போது, உடல் ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் இன்சுலின் தேவை ஏற்படுகிறது. சில மணி நேரத்தில் காலை உணவு நேரம் வந்து மீண்டும் அந்தச் சுழற்சி தொடங்குகிறது” என்று அவர் விளக்கினார்.

உணவுத் தேர்வு

இரவில் தாமதமாக உண்ண நேர்ந்தால் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து, பொரித்த உணவுகள், இனிப்புகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது டாக்டர் அகிலாவின் அறிவுரை.

தாமதமாக உண்பதால் உடல் நடவடிக்கைகளுக்கு நேரமின்றி, உடனே உறங்கச் செல்ல நேரிடலாம் என்பது அதற்கு அவர் சொல்லும் காரணம்.

அப்படி இரவு உணவு உண்டதும் உடனே உறங்கச் செல்வது உடல் எடையை அதிகரிக்கும்; இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி, இரண்டாம் வகை நீரிழிவு ஆபத்தையும் ஏற்படுத்தும்.

எளிய மாற்றங்கள்

“இரவு உறங்குவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்பே உண்ண வேண்டும் அதில் புரதம், காய்கறிகள், நார்ச்சத்து ஆகியவை நிறைந்து இருக்க வேண்டும்” என்று டாக்டர் அகிலா மணி கூறுகிறார். உணவிற்குப் பிறகு பதினைந்து நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி செய்வதும் நல்லது என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இரவில் குறைவாக உண்ண வேண்டும் என்றும் அதே நேரத்தில் அவ்வுணவானது புரதச்சத்து மிக்கதாகவும் மாவுச்சத்து குறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் டாக்டர் ககன்தீப் வலியுறுத்துகிறார்.

தீவிர உணவுக் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்பது மருத்துவர்களின் அறிவுரை.

மாறாக, சீரான உணவு நேரம், சத்தான உணவு, உடற்பயிற்சி, போதிய உறக்கம் ஆகியவற்றைப் பின்பற்றுவதன்மூலம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, நீரிழிவு அபாயத்தைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்