கனவெனும் பூட்டுக்குக் கல்வியே திறவுகோல்

3 mins read
எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்குச் சான்றாகத் திகழும் சாதனைப் பெண்மணி
90ffb083-37b6-47ef-ab15-74bb8b620fd4
72 வயதில் முனைவர் பட்டம் பெற்றார் பிரேமா சுப்பிரமணியம். - படம்: ராஃபிள்ஸ் ஸ்டுடியோ
multi-img1 of 3

72 வயதில் முனைவர் பட்டம் பெற்றுள்ள பிரேமா சுப்பிரமணியம், 2025ஆம் ஆண்டைப் புதிய கண்ணோட்டத்துடன் எதிர்நோக்குகிறார்.

பெண்களைத் தொழில்முனைவர்களாக ஊக்குவிப்பது, புத்தாண்டில் இவரது முக்கிய இலக்குகளில் ஒன்று,

பிஎஸ்பி அகாடமியும் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகமும் இணைந்து, வணிக நிர்வாகத்தில் வழங்கும் பகுதிநேர முனைவர் படிப்பை அவர் நான்கு ஆண்டுகளாக மேற்கொண்டார். அவருடைய முயற்சிகளின் பலனாக, சென்ற நவம்பர் இறுதியில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.

தமது ஆய்வின்போது அவர் சிங்கப்பூரில் 14 பெண் தொழில்முனைவர்களை நேர்கண்டார்.

“எதனால் பெண்கள் காலை 9 முதல் மாலை 6 மணி வரையிலான வேலைக்குப் பதிலாகத் தொழில்முனைவர்கள் ஆக விரும்புகிறார்கள்? தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? அவர்களுக்கு சிங்கப்பூரில் எத்தகைய ஆதரவு கிடைக்கிறது? என எனக்குள் எழுந்த கேள்விகளே என்னை இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தூண்டின,” என்றார் முனைவர் பிரேமா.

முனைவர் பிரேமாவிற்கு வணிகத்தில் எப்பொழுதுமே நாட்டம் இருந்துவந்துள்ளது. அவர் பகுதிநேரமாக ஏம்வே, டப்பர்வேர் போன்ற நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆனால், குடும்பத்தை ஆதரிப்பதற்கு முறையான சம்பளம் தேவைப்பட்டதால் அவரால் முழு நேரமாக வணிகம் செய்யமுடியவில்லை.

தன்னைப் போல வணிகத்தில் ஆர்வம் கொண்டிருக்கும் பெண்கள் வெற்றிகரமாகச் சுயதொழில் புரியவேண்டும் என்பதும் அதற்குத் தானும் தூண்டுகோலாக இருக்கவேண்டும் என்பதுமே இவருடைய கனவு.

“பெண்களின் திறன்களை இச்சமுதாயம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. பெண்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கும்போது, மற்ற பெண்களுக்கும் அவர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.

“பெண் தொழில்முனைவர்களுக்கு நிதியாதரவு, வழிகாட்டிகள், பயிற்சி, அரசாங்கத் திட்டங்கள் பற்றிய தகவல், குடும்ப ஆதரவு, தொடர்புகள் இன்னும் தேவைப்படுகின்றன,” என்றார் முனைவர் பிரேமா.

முனைவர் படிப்பை மேற்கொள்ளும் முயற்சியில் அவர் இருமுறை தோல்விகண்டார். கேப்லேன்வழி தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபின் அப்பல்கலைக்கழகம் முனைவர் பட்டக் கல்வி வழங்குவதிலிருந்து பின்வாங்கியது. பின்பு, கேன்பரா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சில காலத்தில் அவருடைய கணவர் நோய்வாய்ப்பட்டு, 2015ல் காலமானார். கொவிட்-19 தொற்றுகாலத்தைத் தாண்டி, மூன்றாம் முறை அவர் முனைவர் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

முனைவர் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பிரேமா சுப்பிரமணியம், 72.
முனைவர் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பிரேமா சுப்பிரமணியம், 72. - படம்: பிரேமா சுப்பிரமணியம்
வெள்ளி, தங்கத்தின் பளபளப்புகூட நாளடைவில் குறையும். ஆனால் கல்வியறிவு என்றுமே மங்காது.
முனைவர் பிரேமா சுப்பிரமணியம்

இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் சிறிய, நடுத்தர வர்த்தக நிலையத்தில் (SME Centre@SICCI) சேரவோ, பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றவோ திட்டமிடுகிறார் முனைவர் பிரேமா.

கல்வியே அழியாச் சொத்து

முனைவர் பட்டச் சான்றிதழுடன் பிரேமா சுப்பிரமணியம்.
முனைவர் பட்டச் சான்றிதழுடன் பிரேமா சுப்பிரமணியம். - படம்: பிரேமா சுப்பிரமணியம்

“என் பெற்றோர் என்னிடம் கூறியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. வெள்ளி, தங்கத்தின் பளபளப்புகூட நாளடைவில் குறையும். ஆனால், கல்வியறிவு என்றுமே மங்காது. அது முற்றிலும் உன்னுடையது என அவர்கள் கூறி, என்னை ஊக்கப்படுத்தினர்,” என்றார் முனைவர் பிரேமா.

அதனால், 1978ல் தன் திருமணத்திற்குமுன் லண்டன் வங்கியாளர் கழகத்திலிருந்து வங்கியியலில் பட்டயம் பெற்ற இவர், திருமணத்திற்குப் பின்பும் தன் கல்விப்பயணத்தை நிறுத்தவில்லை.

பிரெஞ்சு வங்கியில் பணியாற்றியபடியே சிங்கப்பூர் வங்கியியல், நிதிக் கழகத்திலிருந்தும் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகத்திலிருந்தும் மூன்று பட்டயங்கள் பெற்றார். பின்பு, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களிலிருந்து வணிகத்தில் இளநிலைப் பட்டமும் இரு முதுநிலைப் பட்டங்களும் பெற்று, வங்கி மேலாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.

“என் ஒவ்வொரு வகுப்பிலும் நான்தான் வயதில் ஆக மூத்தவராக இருந்துள்ளேன்,” எனச் சிரித்தவாறே கூறினார் முனைவர் பிரேமா.

தன் கல்வி தன்னோடு நின்றுவிடக்கூடாது

வங்கியில் பணியாற்றியபடியே அவர் என்டியுசி தொடர்கல்வி, பயிற்சித் திட்டத்தில் ‘ஏ’ நிலை, ‘ஓ’ நிலை மாணவர்களுக்கு விரிவுரையும் ஆற்றிவந்தார்.

அதைத் தொடர்ந்து, ஆரம்பக்கல்வியில் சான்றிதழ்கள் பெற்று, 2010 முதல் 2023 வரை கல்வி அமைச்சின் ‘ஃபிலேர்’ (FLAIR) திட்டம்வழி, ஆங்கிலத்தில் உதவி தேவைப்படும் பாலர்பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்தார்.

‘சிண்டா புரோஜெக்ட் ரீட்’ திட்டத்தில் 2005ல் தொண்டூழியராகத் தொடங்கி இவ்வாண்டின் ‘நூல் மந்திரவாதிகள்’ (Book Wizards) திட்டம் வரைத் தொடர்ந்து சேவையாற்றி வந்துள்ளார் முனைவர் பிரேமா.

கேன்பரா இந்தியர் நற்பணிச் செயற்குழு, ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ அமைப்பு என மற்ற வழிகளிலும் இவர் சமூகத்திற்குத் தொடர்ந்து பங்காற்றி வருகிறார்.

மனமிருந்தால் போதும், வயது எதற்கும் தடையன்று என்பதற்கு இவர் நல்ல முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.

புதிய பரிமாணங்களில் தொடர்ந்து தன்னை மேம்படுத்தி, வெற்றிப் பாதையில் பலருக்கும் வழிகாட்டியாக விளங்கும் நோக்கத்துடன் 2025க்குள் அடியெடுத்துவைக்கிறார் முனைவர் பிரேமா.

அன்றைய சிண்டா தலைமை நிர்வாகி பரதன், சிண்டா தலைவர் இந்திராணி ராஜா முன்னிலையில், பிரதமர் லாரன்ஸ் வோங்கிடமிருந்து (அப்போது கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர்) எட்டு ஆண்டு சேவைக்கான பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார் முனைவர் பிரேமா.
அன்றைய சிண்டா தலைமை நிர்வாகி பரதன், சிண்டா தலைவர் இந்திராணி ராஜா முன்னிலையில், பிரதமர் லாரன்ஸ் வோங்கிடமிருந்து (அப்போது கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர்) எட்டு ஆண்டு சேவைக்கான பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார் முனைவர் பிரேமா. - படம்: பிரேமா சுப்பிரமணியம்
இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் அமைப்புவழி முனைவர் பிரேமா வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொண்டாற்றுகிறார்.
இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் அமைப்புவழி முனைவர் பிரேமா வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொண்டாற்றுகிறார். - படம்: பிரேமா சுப்பிரமணியம்
கேன்பரா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினராகவும் செயல்படுகிறார் முனைவர் பிரேமா.
கேன்பரா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினராகவும் செயல்படுகிறார் முனைவர் பிரேமா. - படம்: பிரேமா சுப்பிரமணியம்
குறிப்புச் சொற்கள்