சரியான நேரத்தில் தூங்கி எழுவது, முழுதாக எட்டுமணி நேரம் தடையின்றித் தூங்குவது ஆகிய உடல் நலனுக்கான அடிப்படைத் தேவைகளைத் தற்போதைய மின்னிலக்கத் தாக்கம் மாற்றிவிட்ட நிலையில் ஆழ்ந்த உறக்கம் பலருக்கும் கடினமாகியுள்ளது.
பணிச்சுமை, வாழ்வியல் முறை, மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களினால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்காமல் இருப்போர், தூக்கம் அளிக்கும் தன்மை கொண்ட சில குறிப்பிட்ட உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
படுக்கைக்குச் செல்லும் முன் மிதமான சூட்டில் பால் அருந்துவது சிறந்தது. பாலில் உள்ள டிரிப்டோஃபன் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலம் மூளையிலுள்ள செரட்டோனின் என்னும் நரம்பியக்கக் கடத்திகளைத் தூண்ட உதவுகிறது.
அத்துடன் தூக்கத்தை வரவழைக்கும் மெலட்டோனின் (Melatonin) எனப்படும் சுரப்பிகளையும் அதிகரிக்கிறது.
தூங்குவதற்கு முன் ஒரு வாழைப்பழம் உட்கொள்வதும் தூக்கம் வரவழைக்கும்.
எளிதில் செரிமானம் ஏற்பட்டு, பின்னிரவில் பசி எடுப்பதால் சிலரது தூக்கம் பாதிப்படையலாம். அவர்கள் அன்றாடம் நான்கு பாதாம் பருப்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இரவில் பசி ஏற்படுவதைத் தடுக்க உதவுவதுடன், இதிலுள்ள மெக்னீசியம் சத்து தசைகளைத் தளர்வாக்கி தூக்கத்தில் ஆழ்த்த உதவும்.
கீரைகள், உலர் விதைகள், அவோகாடோ பழம் ஆகிய மெக்னீசியம் நிறைந்த உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பசியினால் தூக்கம் தடைபடும் சிரமம் உள்ளவர்கள் ஓட்ஸ் தானியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் மெலட்டோனின் சுரப்பியைத் தூண்டி தூக்கத்துக்கு உதவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
புரதம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றிலும் டிரிப்டோஃபன் அமிலம் நிறைந்துள்ளது. இவற்றுடன் சரியான அளவு மாவுச்சத்துள்ள உணவுகளை இணைத்து உட்கொள்வது நல்லது. அவை ரத்த ஓட்டத்திலிருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி, டிரிப்டோஃபன் அமிலத்தை மூளைக்கு வேகமாகக் கடத்த உதவுகிறது.
‘சேஜ்’ எனும் மருத்துவச் சாமந்தி, ‘பேசில்’ எனும் வகை இலைகளின் இணைவு தூக்கத்தைத் தூண்டும். அதனையும் இரவு உணவில் சேர்க்கலாம்.
உணவுமுறை மீதான கவனமின்மையும் உறக்க சுழற்சியைப் பாதிக்கலாம். நீரேற்றத்தை அதிகரிக்கும் பழங்கள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்வது சிறப்பு.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
தூங்குவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பாக காப்பி, தேநீர் அருந்துவதை நிறுத்த வேண்டும்.
அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதும், மிகவும் தாமதமாக உண்பதும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி நடு இரவில் உறக்கத்தைக் கலைக்கலாம்.
இரவில் அதிக காரமான உணவைத் தவிர்க்கலாம். அவை உடலின் வெப்ப நிலையைக் கூட்டி தூக்கத்தைத் தடுக்கும்.