சிங்கப்பூரில் அதிக புரதச்சத்து உள்ள உணவுக்கான மோகம்

சிங்கப்பூரில் அதிக புரதச்சத்து உள்ள உணவுக்கான மோகம்

3 mins read
அதிக புரதச்சத்து உள்ள உணவு மோகத்திற்கான காரணங்கள்
fc0f72f4-9104-4981-bc29-716d372e134d
திரும்பும் பக்கமெல்லாம் அதிக புரதச்சத்து கொண்ட உணவு வகைகளைக் காண முடிகிறது. - படம்: செயற்கை நுண்ணறிவு

இன்று சிங்கப்பூரில் உள்ள எந்தவொரு கடைத்தொகுதிக்குள் நுழைந்தாலும் ‘புரோட்டீன்’ அல்லது புரதச்சத்து என்ற வார்த்தையைத் தவிர்ப்பது கடினம்.

2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் குறைந்த கொழுப்பு உணவுகளுக்கு இருந்த மோகம் இப்போது அதிக புரதச்சத்து உள்ள உணவுகளுக்கு மாறியுள்ளது.

கோழி, சால்மன் மீன், முட்டை போன்ற இயற்கையான புரத உணவுகளைத் தாண்டி, சீரியல், தயிர், சிப்ஸ், தண்ணீர் போத்தல்களில்கூட ‘அதிக புரதச்சத்து’ என்ற முத்திரை பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளது.

வியாபாரமும் மக்கள் வரவேற்பும்

அதிக புரதச்சத்துள்ள உணவுகளுக்கான மோகத்தால் சந்தையில் பல புதிய தயாரிப்புகள் அறிமுகமாகியுள்ளன.

உதாரணத்திற்கு, ‘7-இலெவன்’ கடைகளில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் கிளைகளில் புரதச்சத்து உணவுகளுக்கென தனிப்பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

‘ஓட்ஸைட்’, ‘எஃப்என்என்’ போன்ற நிறுவனங்கள் தங்களின் பால், ஓட்ஸ் பால், பானங்களில் அதிக புரதச்சத்து உள்ள வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

வழக்கமான உணவுகளைவிட இவை விலை அதிகம் என்றாலும் மக்கள் அவற்றை விரும்பி வாங்குகின்றனர்.

உதாரணமாக, ஒரு சாதாரண சாக்லேட் பாலின் விலையைவிட அதே முத்திரையில் அதிக புரதச்சத்துள்ள பாலின் விலை இருமடங்கு அதிகமாக உள்ளது.

திடீர் மோகத்திற்கான காரணம்

உடற்பயிற்சி, ஆரோக்கியம் மீதான ஆர்வம் அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம்.

‘ஹைரொக்ஸ்’, ‘குரோஸ்ஃபிட்’ போன்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வோர் தங்கள் தசைகளை விரைவாக மீட்டெடுக்கப் புரதத்தை அதிகம் நாடுகின்றனர்.

மேலும், உலகளவில் பிரபலமாகிவரும் ‘ஒசெம்பிக்’ போன்ற எடைக் குறைப்பு மருந்துகளின் தாக்கமும் இதில் உள்ளது.

இந்த மருந்துகள் ‘ஜிஎல்பி-1’ என்ற ஹோர்மோனைத் தூண்டிப் பசியைக் குறைக்கின்றன.

அதிகப் புரதச்சத்தை உட்கொள்வதால், இயற்கையாகவே உடலில் அந்த ஹோர்மோன் தூண்டப்படுகிறது. அதனால், பலரும் எடைக் குறைப்பிற்காக அதிக புரதச்சத்துள்ள உணவுகளை நாடிச் செல்கின்றனர்.

உண்மையில் ஒருவருக்கு எவ்வளவு புரதம் தேவை?

2019ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பின்படி, சிங்கப்பூர்களில் நால்வரில் மூவர் ஏற்கெனவே தங்களுக்குத் தேவையான அளவு புரதத்தை தங்கள் அன்றாட உணவிலேயே உட்கொள்கின்றனர்.

சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி, 49 வயது மற்றும் அதற்குட்பட்டவர்களுக்கு அவர்களின் உடல் எடையில் ஒவ்வொரு கிலோவிற்கும் 0.8 கிராம் புரதம் போதுமானது.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, வயது மூப்பால் ஏற்படும் தசை இழப்பைத் தடுக்க கிலோவுக்கு 1.2 கிராம் புரதம் தேவைப்படுகிறது.

முதியவர்களில் இருவரில் ஒருவர் அந்த அளவை எட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகப் புரதம் உள்ளது என்பதாலேயே ஒரு பாக்கெட் உணவு ஆரோக்கியமானது என்று அர்த்தமல்ல என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் புரதம் சேர்க்கப்பட்டிருந்தாலும் அவற்றில் அதிக அளவு உப்பு, சர்க்கரை, கெட்ட கொழுப்பு இருக்கலாம்.

“விலை உயர்ந்த பாக்கெட் உணவுகளைவிட அன்றாடம் நாம் உண்ணும் முட்டை, தோஃபு, பருப்பு வகைகள், சோயா பால் ஆகியவை மலிவான, சிறந்த புரத வகைகள்,” என்று சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் வெரெனா டான் கூறினார்.

புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், விளம்பரங்களை நம்பி தேவையற்ற செயற்கை புரத உணவுகளுக்கு அதிகப் பணம் செலவழிப்பதைவிட, இயற்கை உணவுகளைச் சாப்பிடுவதும் சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றுவதும் நீண்டகால ஆரோக்கியத்திற்கு நல்லது.

மூத்த குடிமக்களுக்கு மட்டுமே கூடுதல் புரதத் தேவைகள் உள்ளன. மற்றவர்கள் தங்களின் அன்றாட வீட்டு உணவுகள் மூலமே போதுமான புரதத்தைப் பெறலாம்.

“நான் தினமும் உடற்பயிற்சி செய்வதால் தசை மீட்புக்கு புரதம் மிகவும் அவசியம். முன்பெல்லாம் இதற்காக பிரத்யேகத் தூளை மட்டுமே நம்பியிருந்தோம். இப்போது, கடைகளிலேயே புரதம் செறிவூட்டப்பட்ட பால், தயிர், சிற்றுண்டிகள் எளிதாகக் கிடைப்பது வரவேற்கப்படுகிறது. ஆனால், அவற்றின் விலை சாதாரண பொருள்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது,” என்றார் மென்பொருள் பொறியாளர் தினேஷ் குமார், 28.

“இப்போதெல்லாம் கடைகளில் வாங்கும் பிஸ்கட், சாக்லேட் பானங்களில்கூட ‘ஹை புரோட்டீன்’ என்று பெரிய எழுத்துக்களில் அச்சிடுகிறார்கள். இது உண்மையிலேயே ஆரோக்கியமானதா அல்லது வெறும் வியாபாரத் தந்திரமா என்று குழப்பமாக இருக்கிறது.

“விளம்பரங்களை நம்பி அதிகமாகச் செலவு செய்து இவற்றை வாங்குவதற்குப் பதிலாக என் குழந்தைகளுக்கு நான் வீட்டில் சமைக்கும் முட்டை, கொண்டைக்கடலை, மாமிச உணவுகளைக் கொடுப்பதையே பாதுகாப்பாகக் கருதுகிறேன்,” என்று சொன்னார் இல்லத்தரசி சுமதி ராமசந்திரன், 43.

குறிப்புச் சொற்கள்