நீரிழிவைத் தடுக்கும் மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம்

2 mins read
3ab236b6-3110-4108-abca-3763f0287c99
மத்திய தரைக்கடல் உணவுமுறையில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மீன்கள் ஆகியவை முக்கிய இடம்பிடிக்கின்றன.  - படம்: இணையம்

நோய் நொடியின்றி நலமாக வாழவே எல்லாரும் விரும்புவர். அத்தகைய வாழ்க்கைமுறைக்குச் சத்து நிறைந்த உணவு மிக முக்கியம். 

இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற உணவுத் தெரிவுகள் இருப்பதால், அவரவர் உடல்நிலைக்கும் தட்பவெப்பநிலைக்கும் ஏற்ற உணவுவகைகளை உண்பதே சிறந்தது.

அத்தகைய நல வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்களைத் தடுக்கலாம்.

அவ்வகையில், மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கத்துடன் போதிய உடற்பயிற்சியும் இருந்தால் இரண்டாம் வகை நீரிழிவு நோயைத் தடுக்கலாமெனச் சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

மத்திய தரைக்கடல் உணவுமுறையில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மீன்கள் ஆகியவை முக்கிய இடம்பிடிக்கின்றன. 

இந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றாதவர்களோடு ஒப்பிடுகையில், இதனைப் பின்பற்றுவோர் இரண்டாம் வகை நீரிழிவால் பாதிக்கப்படும் அபாயம் குறைவு என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. 

உணவுமுறை, உடற்பயிற்சி, எடைக் கட்டுப்பாடு ஆகியவை நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். 

ஸ்பானிய மருத்துவமனைகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் பங்கெடுத்தவர்களுக்கு மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம் குறித்தும் கலோரிகளைக் குறைவாக எடுத்துக்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. 

ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் என வாரத்தில் ஆறு நாள்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது அதற்குச் சமமான ‘ஏரோபிக்’ போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுவது குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

அத்துடன், வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை உடலை வலுவாக்கும் பயிற்சியையும் உடற்சமநிலைப் பயிற்சியையும் செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து, அளவோடு உணவுண்போர் தங்கள் எடையை 7 விழுக்காடு குறைக்கவும் நீரிழிவு நோயைத் தவிர்க்கவும் முடிவது ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டது. 

அத்துடன், முதுமைக் காலத்தில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு (அல்சைமர்ஸ்) நோய்க்கான ஆபத்துகளையும் மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம் குறைக்கும் எனத் தெரியவந்துள்ளது.  

மத்திய தரைக்கடல் உணவுமுறை போன்ற நல உணவுமுறைக்கு மாறுவதற்கும் உடல்நலத்தை மேம்படுத்தவும் நோய்களைத் தடுக்கும் உடல் செயல்பாடுகளை அதிகரிக்கவும் வயது ஒரு தடையன்று.

குறிப்புச் சொற்கள்