தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிப்புறச் சூழல் தரும் இயற்கை ஊட்டச்சத்து

2 mins read
2edbad32-f344-4c8a-9e65-7356a4a4ea15
இயற்கையுடன் நேரம் செலவிடுவது மூளையின் செயல்திறன், கூர்மை, கவனம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து. - படம்: பிக்சாபே

உடற்பயிற்சி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் குறித்து அனைவரும் பேசிவரும் வேளையில், மனநலனுக்குத் தேவையான ‘வைட்டமின் என்’ (Vitamin N) பேசுபொருளாக மாறியுள்ளது.

வைட்டமின் ‘என்’ என்பது இயற்கையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘நேச்சர்’ - அதாவது குறிப்பிட்ட நேரத்தை இயற்கையுடன் செலவிடுவதால் கிடைக்கும் நன்மை, வைட்டமின் ஊட்டச்சத்துக்கு ஒப்பானதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பாக, நவீன உலகில் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு ‘வைட்டமின் என்’ தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை 10 நிமிடங்கள் வீதம் இயற்கையுடன் செலவிடுவது உடலிலும் மனதிலும் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் தனது சிறு சிறு பிரச்சினைகளைத் தானே சரி செய்துகொள்ளும் என்றும் அதற்கான அவகாசம்தான் தேவை என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். அதற்கும் இந்த இயற்கையுடனான நேரம் உதவும் என்றும் கூறுகின்றனர்.

மேலும், பறவைகள், காற்றில் அசையும் மரங்களைப் பார்ப்பது பரபரப்பாக இயங்கிப் பழகிய மூளைக்கு வேகத்தடையாக அமைகிறது. சீரான வேகத்தில் கவனச் சிதறல்களின்றி நடப்பது ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

மின்னிலக்கச் சாதனங்களை அருகில் வைத்துப் பார்த்துப் பழகிய கண்களுக்குத் தொலைவிலுள்ள மரஞ்செடிகளைப் பார்ப்பது சிறந்த பயிற்சியாக அமையும்.

பூங்காக்கள், கடற்கரை, மலை உள்ளிட்ட பகுதிகள் ‘வைட்டமின் என்’ கிடைக்கும் செழிப்பான இடங்கள் என்கின்றனர் இதனைக் கடைப்பிடிப்போர்.

குறிப்பாக, சிறுவர்களின் குழந்தைப் பருவம் வீட்டிலே அமைந்துவிடுவதால் அவர்கள் சராசரியாக வாரத்திற்கு 44 மணி நேரம் திரையின் முன் செலவிடுவதற்குப் பழகிவிடுகின்றனர் என்கிறது ஆய்வு. நாளொன்றுக்கு 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே வெளியில் நேரம் செலவிடும் போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இயற்கையுடன் நேரம் செலவிடுவதால் குழந்தைகளின் அணுகல் தன்மை, படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன், சிந்தனைத் திறன் ஆகியவை மேம்படும். இதனால், இந்தப் போக்கைக் குழந்தைகளிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கும் அனைத்துலக அமைப்புகளும் இதனைப் பெற்றோர்கள் சவாலாக ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன. அதனைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஊக்குவித்து வருகின்றன.

‘வைட்டமின் என்’ பெற...

முதலில், மாதத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் வெளியில் செலவழிக்கும் இலக்கை வகுத்துக்கொள்ளலாம். வேடிக்கை பார்த்தபடி மெல்ல உணவைச் சுவைப்பது, நடப்பது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். கண்ணில்படும் தாவரங்கள் குறித்து அறிய முயலலாம்.

சிறுவர்களுடன் செல்லும்போது பூக்கள், விலங்குகள், விண்மீன்கள் குறித்து விவரிக்கலாம். செடி வளர்க்க, அவற்றைப் பராமரிக்க ஊக்கப்படுத்துவது நேரத்தைக் கடத்துவதுடன் ஒரு வெற்றி மனநிலையையும் உருவாக்கும்.

சூரிய உதயம், மறைவு உள்ளிட்டவற்றை வெளிப்புறத்தில் நின்று ரசித்துப் பழகலாம். விடுமுறைகளைச் செலவிட அவ்வப்போது மலையேற்றம், அடர்ந்த இயற்கை சூழ்ந்த இடங்களை வலம் வருவதும் சிறந்த வழி.

குறிப்புச் சொற்கள்