சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் பாவேந்தர் பாரதிதாசனின் 135ஆம் பிறந்தநாளை முன்னிட்டு சுழலும் சொற்போர் வடிவத்தில் பாவேந்தர் இலக்கிய விழாவை ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி காலை நடத்தியது.
தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16ஆம் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் வழங்கிய நோக்கவுரையில், வரும் ஆண்டுகளில் பாரதிதாசன் கவிதைகளைப் பள்ளி மாணவர்கள், இளையர்களிடம் கொண்டுசேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். விழாவிற்குத் தலைமையேற்ற விநாயகா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன இயக்குநர் ஜோதி மாணிக்கவாசகம், அக்காலக் கவிஞர்களையும் அவர்தம் கவிதைகளையும் இன்றைய இளையர்கள் அறியச் செய்யவேண்டியது அவசியம் என்றார்.
சிறப்பு விருந்தினரான முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா.தினகரன் இந்த ஆண்டின் பாவேந்தர் விருதினைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா ஆண்டியப்பனுக்கு வழங்கினார்.
பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரும் இணையத்தின் வழி உலகத் தமிழர்களைக் கவர்ந்த பேச்சாளருமான தமிழகத்தைச் சேர்ந்த புலவர் இராமலிங்கம் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார்.
தமிழின் முக்கியத்துவம், மேன்மை பற்றி நகைச்சுவை கலந்த சிறப்புரையோடு சுழலும் சொற்போரை அவர் தொடங்கிவைத்தார்.
பாவேந்தர் பாரதிதாசனின் தேனருவிக் கவித்தொகுப்பில் பெரிதும் வலியுறுத்தப்படுவது தமிழின் மேன்மையே என்று முனைவர் உஷா சுப்புசாமி, பெண்ணின் பெருமையே என்று திருமதி வானதி பிரகாஷ், சமுதாய விழிப்புணர்வே என்று திருமதி இசக்கிச்செல்வி சுபாஷ் மூவரும் வாதிட்டார்கள்.
மூன்று சுற்று வாதங்களின் நிறைவில் பெண்ணின் பெருமையே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
செய்தி: சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்

