அனைத்துலக ரசிகர்களுக்காக இன்னிசை நிகழ்ச்சி படைக்க சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் தேவாவுக்கும் அவரின் குழுவினருக்கும் அவர் இசையமைத்த படங்களின் பெயரைக் கொண்டு சமைக்கப்பட்ட அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.
‘குஷி மட்டன் பிரியாணி’, ‘அடிதடி மட்டன் மசாலா’, ‘அண்ணாமலை பால் அல்வா’ எனத் திரு தேவா இசையமைப்பில் வெளிவந்த பிரபல தமிழ்த் திரைப்படங்களின் பெயரை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ஏறத்தாழ 15க்கும் மேற்பட்ட பிரத்தியேக உணவு வகைகள் திரு தேவா குழுவினருக்கு வழங்கப்பட்டன.
அப்போலோ ஃபுட் வில்லேஜ் உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 27) அன்று நடைபெற்ற இவ்விருந்தை, அந்த உணவகத்தின் சமையல் கலைஞர் திரு குமரேசன் கோகுலநாதன், உதவி சமையல் வல்லுநர்கள் திரு பாலாஜி, திரு பூஷன் ஆகியோர் கொண்ட மூவர் குழு ஆயத்தப்படுத்தியதாக உணவகம் கூறியது.
“இசை விருந்து படைக்க சிங்கப்பூருக்கு வந்துள்ள திரு தேவாவுக்கு இதுவரை யாரும் கொடுத்திராத, இனிமேலும் யாரும் கொடுத்திட முடியாத வகையில் சிறப்பான நினைவுகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த விருந்துக்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கின,” என்று தமிழ் முரசிடம் கூறினார் அப்போலோ ஃபுட் வில்லேஜ் சமையல் கலைஞர் திரு குமரேசன் கோகுலநாதன்.
இந்த முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு பாலாஜி, “புகழ் பெற்ற இசையமைப்பாளருக்குப் பாரம்பரிய விருந்தை ஆயத்தம் செய்து பரிமாறிய தருணத்தைப் பெருமையாகக் கருதுகிறேன்,” என்றார்.
“குறிப்பாக, திரு தேவா சைவ உணவு வகைகளை உட்கொள்வார் என்று அறிந்தவுடன் உணவில் பயன்படுத்தக்கூடிய தங்கத் துகள்கள் (Edible Gold) கொண்டு சிறப்புக் கருப்பட்டி ஆப்பம் தயாரித்துக் கொடுத்தோம்,” என்று விவரித்தார் திரு குமரேசன்.
திரு தேவா, திரு ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் இவ்விருந்தில் பங்கேற்றதாகக் கூறிய திரு குமரேசன், உணவுப் பட்டியலில் இடம்பிடித்திருந்த ஒவ்வோர் ஆகாரத்தின் பெயரையும் பொறுமையாகக் கேட்டறிந்த திரு தேவாவின் பண்பும் பாராட்டும் வியக்க வைத்தன என்றார்.
சிங்கப்பூரின் ‘8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தால் ஜனவரி 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு ‘த ஸ்டார்’ அரங்கில் ‘தேவா இன்னிசைச் சாரல்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த உபசரிப்பு குறித்து கருத்துரைத்த அந்நிறுவனத்தின் தலைவர் பெ. அருமைச் சந்திரன், “உணவுகளிலிருந்த புத்தாக்கம், நம் விருந்துபசரிப்பின் புதிய பரிணாமம்,” என்றார்.