சுற்றுலாத் தலங்களுக்குத் தனித்தமிழ்ப் பெயர்களைத் தாங்கியுள்ள ‘சிங்கப்பூர் - கண்டதும் கற்றதும்’

2 mins read
cdc1d03a-8669-40f0-b0a9-a31ec8151c0e
கவிஞர் மகுடேசுவரன் (முன்வரிசையில் வலமிருந்து இரண்டாவது) எழுதிய ‘சிங்கப்பூர் - கண்டதும் கற்றதும்’ பயண நூல் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உமறுப்புலவர் அரங்கில் வெளியிட்டார் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் (நடுவில்). - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம்

கவிஞர் மகுடேசுவரனின் ‘சிங்கப்பூர் - கண்டதும் கற்றதும்’ பயண நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) உமறுப்புலவர் அரங்கில் வெளியீடு கண்டது.

சிங்கப்பூர் பற்றிய பயணநூல்கள் பல எழுதப்பட்டிருப்பினும், தனித்தமிழ் சொல்லாட்சியுடன், சுற்றுப்பயணிகளை எளிதில் ஈர்க்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலுள்ள பல சுற்றுலாத் தலங்களுக்குத் தனித்தமிழ்ப் பெயர்களை ஆக்கி அளித்துள்ளார் கவிஞர் மகுடேசுவரன்.

சென்ற 2023ஆம் ஆண்டு தமிழ்மொழி மாதத்தின் நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்திருந்த கவிஞர், சிங்கப்பூரைப் பற்றிய தமது அனுபவங்களை நூலாக வடித்துத் தந்துள்ளார்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய திரு நாணற்காடன், தமிழில் பிழையின்றி எழுதுவோரையும் பேசுவோரையும் விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றும், இந்நிலை தொடரக்கூடாது என்றும், கவிஞர் மகுடேசுவரன் நடத்தும் இணைய வகுப்புகளில் கலந்துகொண்டு, பிழையின்றிப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டு, தமிழை வாழும் மொழியாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், சிங்கப்பூரிலுள்ள பல உல்லாசத் தளங்களுக்கு கவிஞர் மகுடேசுவரன் சூட்டிய தமிழ்ப் பெயர்களை வெகுவாக மெச்சினார்.

தற்பொழுது அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு போன்ற துறைகளில் கையாளப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான பொதுவான தமிழ்ச்சொற்களை உருவாக்கியும் தொகுத்தும், எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தனியாக ஓர் அகராதியை வெளியிட முயல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின்போது ‘தமிழாடும் நெஞ்சில்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய கவிஞர் மகுடேசுவரன், “தமிழில் புதுச்சொல் என்று சொல்வது புதுச்சொல்லே அன்று. அது எனக்குப் புதுச்சொல்லாகவே தெரியவில்லை. வழக்கிலுள்ள சொற்களையே சற்று புதுமையாக இணைத்தால் புதிய சொல் பிறக்கும்,” என்று சொன்னார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கவிஞர் மகுடேசுவரனின் இணையத்தளம் (https://magudeswaran.com/) அறிமுகப்படுத்தப்பட்டது.

சொல்லாடும் முன்றில் அமைப்பின் ஓராண்டு நிறைவையொட்டி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகமும் மகுடேசுவன் மாணவர் பாசறையும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ‘தமிழ்க்களம்’ போட்டி நடத்தப்பட்டு, 35 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பெரியவர்களுக்கான கவிதைப்போட்டியில் சிறந்த ஐந்து கவிதைகளைக் கவிஞர் மகுடேசுவரன் தேர்வுசெய்து, அவர்களுக்குப் பரிசு வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்