தமிழறிஞரும் கவிஞருமான மகுடேசுவரன், தமது சிங்கப்பூர்ப் பயண அனுபவத்தை ‘சிங்கப்பூர் - கண்டதும் கற்றதும்’ எனும் நூலாக வடித்திருக்கிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தமிழ்மொழி விழாவின் நிறைவுவிழாவில் பங்கேற்று, சிறப்புரை ஆற்றினார் கவிஞர் மகுடேசுவரன். தம்முடைய அப்பயணத்தின்போது சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த வேறு சில நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொண்டார்.
தமது சிங்கப்பூர் அனுபவங்களை எல்லாம் தொகுத்து, அழகுதமிழில் அவர் எழுதியுள்ள நூல், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) மாலை 5.30 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இடம்பெறும் நிகழ்வில் வெளியீடு காணவிருக்கிறது.
சிறார்களிடம் தமிழார்வத்தை வளர்க்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ‘சொல்லாடும் முன்றில்’ அமைப்பு, தனது ஓராண்டு நிறைவினைக் கொண்டாடுகிறது. அதனையொட்டி, ‘சிங்கப்பூர் - கண்டதும் கற்றதும்’ நூல் வெளியீடும் இடம்பெறுகிறது.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகமும் மகுடேசுவரன் மாணவர் பாசறை (சிங்கப்பூர்) அமைப்பும் இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.
அன்றைய நாள் மாலை 4.30 மணி முதல் 5.15 மணிவரை சிறார்களுக்கான ‘தமிழ்க் களம்’ போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழு வயதிற்குட்பட்டோர், எட்டு முதல் 14 வயதிற்குட்பட்டோர் என இரு பிரிவுகளாக அப்போட்டி நடைபெறவுள்ளது. கொடுக்கப்படும் ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைச் சொல்வதுதான் அப்போட்டி.
இரு பிரிவுகளிலும் கலந்துகொண்டு வெற்றிபெறும் முதல் 40 சிறார்களுக்குப் பரிசுகள் உண்டு.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. தினகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். திரு மகுடேசுவரனின் சிறப்புரை இடம்பெறும்.
மாலை 5 மணிக்குத் தேநீர் விருந்து இடம்பெறும்.
அனுமதி இலவசம். தொடர்புக்கு: நீதிப்பாண்டி - 82377006