சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் இயற்கையும் எழுத்தும்

2 mins read
73ecda4d-8cac-4e4a-8499-385e02a42e6c
இவ்வாண்டிற்கான சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் அதிகாரபூர்வ தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சருமான லோ யென் லிங் (இடமிருந்து 4வது). - படம்: மூன்ரைஸ் ஸ்டுடியோ

புத்தாக்கமிக்க சிந்தனை, இலக்கிய உலகின் பன்முகத்தன்மை, கலைஞர்களின் படைப்பாற்றல் ஆகியவற்றைக் கொண்டாடும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு இயற்கையைக் கொண்டாடுகிறது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) தொடங்கிய விழாவில், ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் மொழி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

தேசிய கலைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ 27வது முறையாக நடத்தும் எழுத்தாளர் விழா, ‘நம் இயற்கையும் இயல்புகளும்’ எனும் கருப்பொருளுடன் நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உள்ளூர், அனைத்துலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் என 300க்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் இவ்வாண்டு விழாவில் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காட்டுயிர்ப் பாதுகாவலர், எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன், விருதுபெற்ற கவிஞர், பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், சிறப்புக்கல்வி ஆசிரியர், வரலாற்றுப் புனைவு எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்த ஆண்டு விழாவில் கலந்துகொள்கின்றனர்.

ஞாயிறு (நவம்பர் 10) பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை “இயற்கையும் தமிழிலக்கியமும்” எனும் தலைப்பில் தியடோர் பாஸ் கரனுடன் ஓர் இளையர் கருத்தரங்கு இடம்பெறுகிறது.

ஊடகத்திலும் பல்வேறு கலை வடிவங்களிலும் இயற்கைக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள உள்ளார்ந்த தொடர்பை இந்தக் கருத்தரங்கு ஆராய்கிறது. தமிழில் இயற்கை சார்ந்த உரை யாடல்கள் எவ்வாறு இயற்கைப் பாதுகாப்பிற்கு முக்கியமானவை என்பது குறித்து புகழ்பெற்ற இயற்கைப் பாதுகாவலரும் பசுமை எழுத்தாளரும் ஆன தியடோர் பாஸ்கரன் உரையாற்றுகிறார்.

இயற்கையும் அதைச் சார்ந்த வாழ்வியலும் எவ்வாறு செவ்வியல் இலக்கியங்களிலும், உள்ளூர் மற்றும் புலம் பெயர் இலக்கியங்களிலும், திரைக்கதைகளிலும் பிரதிபலிக்கப்படுகின்றன என் பதைக் குறித்து இளையோரின் உரைகளும் இந்தக் கருத்தரங்கில் இடம்பெறும்.

தமிழில் நடைபெறும் இந்நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.

விழாவில் சிந்தனை அமர்வுகள், கலந்துரையாடல்கள், பயிலரங்குகள், நாடக நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் என இயல், இசை, நாடகத் தமிழ் அணிவகுக்கவுள்ளது.

இயற்கையோடு இயைந்த மனித வாழ்வு,  சுற்றுச்சூழல் மீள்திறன், சமூகத்தை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், மனிதரின் தனிப்பட்ட இயல்புகள் எனப் பல்வேறு தலைப்புகளை ஆராயும் கலந்துரையாடல்கள், சிந்தனை அமர்வுகள், இளையர்களுக்கான கருத்தரங்குகள் எனப் பல நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

நிகழ்ச்சிகளுக்கு மேலும் இனிமை சேர்க்கும் வகையில், நாம் வாழும் இன்றைய உலகில் மனிதராக, எழுத்தாளராக, வாசகர்களாக, உலகக் குடிமக்களாக நமது இயல்பு என்னவென்பதை அறிய முற்படும் சீரிய சிந்தனையைத் தூண்டும் சிறப்பு உரைகள் இவ்வாண்டு எழுத்தாளர் விழாவில் மேடையேற காத்திருக்கின்றன. 

சீன, மலாய் மரபுக் கவிதைகளைப் பற்றியும் அவற்றின் நுணுக்கங்களை ஆராயும் இலக்குடன் கூடிய பன்மொழிக் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இலக்கியம், மொழி, எழுத்து, கலை, தொழில்நுட்பம் என அனைத்தும் ஒருசேர மிளிரும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2024 குறித்த மேல் விவரங்களுக்‌கு www.singaporewritersfestival.com என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்