தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேலாங் சிராய் சமூக மன்றத்தில் கோலாகல தீபாவளி

2 mins read
8c663196-0dbd-4aa8-9206-a803deb19843
கேலாங் சிராய் சமூக மன்றத்தில் தீபாவளி நிகழ்ச்சி. - படம்: கேலாங் சிராய் இந்திய நற்பணி செயற்குழு

முதியோர், இளையர் எனப் பலதரப்பட்டவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கேலாங் சிராய் சமூக மன்றத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 26) நடந்தேறின.

கிட்டத்தட்ட 320 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சியுடன், விளையாட்டுகளும் அதிர்ஷ்டக் குலுக்கலும் இடம்பெற்றன.

ரங்கோலிக் கலைஞர் விஜயா மோகனின் தலைமையில் ஏறத்தாழ 15 பேர் கொண்ட குழு, நெகிழியால் ஆன 7,000 உறிஞ்சுகுழாய்களைக் கொண்டு மலர் வடிவக் கோலங்களை அமைத்தது. 3.1 மீட்டர் அகலமும் 3.1 மீட்டர் நீளமும் கொண்ட ‘ஹார்மனி இன் கலர்ஸ்’ என்ற அந்தக் கோலம், உறிஞ்சுகுழாய்களால் செய்யப்பட்ட சிங்கப்பூரின் ஆகப் பெரிய கோலம் என சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உறிஞ்சுகுழாய்களில் ஆன கோலம்.
உறிஞ்சுகுழாய்களில் ஆன கோலம். - படம்: கேலாங் சிராய் இந்திய நற்பணி செயற்குழு

தீபாவளி பிறந்த கதையைக் கண்முன் கொண்டுவந்த கதகளி நாட்டிய நாடகமும் செவ்விசைக் கலைஞர்களின் படைப்புகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. பாஸ்கர் நடனப் பள்ளி வழங்கிய இந்த அங்கத்துடன் சிங்கப்பூர் இந்திய இசைக்குழுவின் படைப்புகளும் மேடையேறின.

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வந்திருந்த வர்த்தக உரிமையாளர் திருவாட்டி மஹிஸ்ரீ, 29, விளையாட்டுகளையும் கலைநிகழ்ச்சி அங்கங்களையும் மிகவும் ரசித்ததாகக் கூறினார். “நிகழ்ச்சி முழுக்கவே நானும் என்னுடன் இருந்தவர்களும் உற்சாகத்துடன் இருந்தோம்,” என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியைத் திட்டமிடுவதற்குச் சுமார் மூன்று மாதங்கள் ஆனதாக கேலாங் சிராய் இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் முகம்மது மாலீக் தெரிவித்தார்.

“பல இன சிங்கப்பூர் மக்களுடன் புதிய குடியேறிகளும் இணைந்து தீபாவளி உணர்வில் திளைத்தனர்,” என்று திரு மாலீக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்