தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை புத்தகக் காட்சியில்சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு வரவேற்பு

3 mins read
451394d1-9f8d-4e1e-a550-0d525d23156a
தமிழ் நாடு அரசு ஏற்பாடு செய்த அயலகத் தமிழர் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிங்கப்பூரின் உள்துறை, சட்ட அமைச்சர் திரு கா. சண்முகமும் அவரது துணைவியாரும் 12ஆம் தேதியன்று சிங்கப்பூர் அரங்கிற்கு வருகையளித்து நூல்களைப் பார்வையிட்டனர்.  - படம்: எழுத்தாளர் கழகம்

ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை சென்னையில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தேசியக் கலை மன்றத்தின் ஆதரவோடு சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்களை இரண்டு அரங்குகளில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்தது. 

சிங்கப்பூர் படைப்புகளைப் பற்றிய கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள், நூல் அறிமுகங்கள் ஆகியவற்றுக்கும் கழகம் ஏற்பாடு செய்தது. 

வட சென்னைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து எழுத்தாளர் கழகம் ஜனவரி 8ஆம் தேதியன்று  ஏற்பாடு செய்த சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு சென்னை மைலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

அச்சங்கத்தின் தலைவர் திரு இளங்கோ தலைமையில் நடைபெற்ற அக்கருத்தரங்கில், கவிஞர் க. து. மு. இக்பாலின் ‘காவின் குரல்கள்‘ கவிதை நூல் குறித்து கவிஞர் கனகா பாலனும்; கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் ‘வெளிச்ச தேவதைகள்‘ கவிதை நூல் குறித்து கவிஞர் வி. உ. இளவேனிலும்; எழுத்தாளர் அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றி கவிஞர் சூரியதாசும்; எழுத்தாளர் மணிமாலா மதியழகனின்  ‘தேத்தண்ணி’ சிறுகதைத் தொகுப்பு நூல் குறித்து ஊடகவியலாளர் திருவாட்டி கவின் மலரும்;  எழுத்தாளர் நா. ஆண்டியப்பனின்  ‘முள்ளும் மலரும்’ சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றி கவிஞர் மு.முருகேஷூம் உரையாற்றினர். 

எழுத்தாளர் கழகம், மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) பொது நூலகம்,  வாருங்கள் படிப்போம் குழு ஆகியவை இணைந்து ஜனவரி 10ஆம் தேதியன்று மாநிலக் கல்லூரியில், மற்றொரு சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. 

எமரல்ட் பப்ளிஷர்ஸ் நிறுவனர் திரு ஒளிவண்ணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’ நூல் குறித்து எஸ்டிஎன்பி வைஷ்ணவ் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திருவாட்டி பெ. உமா மகேஸ்வரியும்; எழுத்தாளர் சித்ரா ரமேஷின் ‘நிழல் நாடகம்’ நூல் குறித்து மாநிலக் கல்லூரி நூலகர் முனைவர் இ. சசிரேகாவும்; எழுத்தாளர் பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த் திவலைகள்’ சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றித் திருவாட்டி அர்ஷாவும்; எழுத்தாளர் மா. அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ புதினம் குறித்து சமூகப் பணித் துறையில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவி வி. அக்‌ஷ்யாவும்; எழுத்தாளர் மலையரசி சீனிவாசனின் ‘முகிழ்’ சிறுகதைத் தொகுப்பு நூல் குறித்து இயற்பியல் துறையில் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவி இ. லேகாவும் உரையாற்றினர். 

ஜனவரி 13ஆம் தேதியன்று சென்னை புத்தகக் காட்சி அரங்கில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி இராஜராஜனின்  ‘காற்றலையில்’ நூல் அறிமுகமும்; எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் ‘ஆழிப்பெருக்கு’ சிறுகதைத் தொகுப்பு நூல், ‘வண்ண வண்ண ஆர்க்கிட்’, ‘வாலோடு பிறந்தவன்’, ‘கருப்பு வண்ணப் பூனை’, ‘ஒற்றைக் கொம்பு குதிரை’ ஆகிய சிறுவர் பாடல்  நூல்களின் வெளியீடும் நடைபெற்றன.  

‘ஆழிப்பெருக்கு’ நூல் பற்றி நீதியரசர் புகழேந்தி உரையாற்றினார். கன்னிக்கோவில் ராஜா நான்கு சிறுவர் பாடல் நூல்களைப்பற்றி உரையாற்றியதோடு, நூல்களில் இடம்பெற்றுள்ள சில பாடல்களைப் பாடியும் பார்வையாளர்களைப் பாட வைத்தும் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தார். பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் நூல்களை வெளியிட ‘ஆழிப்பெருக்கு’ சிறுகதைத் தொகுப்பை நூலாசிரியர் மணிமாலா மதியழகனின் உடன்பிறப்புகளில் ஒருவரான திருவாட்டி மு.மணிமேகலையும், சிறுவர் பாடல் நூல்களை மாணவர் வி. ச. துருவாவும் பெற்றுக்கொண்டனர். 

தமிழ்ச்செல்வி இராஜராஜனின் காற்றலையில் சிறுகதைத் தொகுப்பை, பேராசிரியர் உலகநாயகி பழநி அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

ஜனவரி 18ஆம் தேதியன்று இடம்பெற்ற நூல் அறிமுக நிகழ்வில், எழுத்தாளர் திரு. பொன். சுந்தரராசுவின் ‘சம்செங்’ புதினம் குறித்து எழுத்தாளரும் ஆவணப்பட, திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமாரும்; முனைவர் மு.இளவழகனின் ‘பீஷ்மர், சகுனி,  பரசுராம்’ நூல்கள் குறித்து பதிப்பாளரும்  இதழாசிரியருமான லேனா தமிழ்வாணனும் உரையாற்றினர்.

சிங்கப்பூர் அரங்கில் சிங்கப்பூரின் துணைத் தூதர் திரு. எட்கர் பாங்கும் (இடமிருந்து 3வது), தூதரக அதிகாரிகளும்.
சிங்கப்பூர் அரங்கில் சிங்கப்பூரின் துணைத் தூதர் திரு. எட்கர் பாங்கும் (இடமிருந்து 3வது), தூதரக அதிகாரிகளும். - படம்: எழுத்தாளர் கழகம்

ஜனவரி 9ஆம் தேதி சென்னையிலுள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதர் திரு. எட்கர் பாங்கும் தூதரக அதிகாரிகளும் சிங்கை அரங்கிற்கு வருகையளித்தனர். “சென்னை புத்தகக் காட்சியில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மூலம் சிங்கப்பூர்ப் பிரதிநிதிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று திரு எட்கர் பாங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்