தமிழக வாசகர்களின் கவனம் சிங்கப்பூர், மலேசிய எழுத்துகள் பக்கம் திரும்பி உள்ளதாகக் கூறிய நாஞ்சில் நாடன், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிலரைப் பாராட்டினார்.

சிங்கப்பூர் பக்கம் திரும்பும் எழுத்துலகம்

தமிழில் சேர்க்கப்படும் பிறமொழிச் சொற்களைச் செல்வங்கள் என வருணித்த பிரபல தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அத்தகைய செல்வங்கள் தமிழுக்குத் தரப்படுவதன் காரணம் அயலகத் தமிழ் இலக்கியப் படைப்புகள் எனப் பாராட்டினார். 

சிங்கப்பூர், மலேசிய இலக்கியத்தில் கிராமத்தைக் குறிக்கும் ‘கம்பம்’ எனும் சொல், மலாய்ச் சொல்லிலிருந்து மருவி வந்தாலும் குறைகூறல்களைப் பொருட்படுத்தாமல் அதனை இயல்பாகப் பயன்படுத்தும்படி ‘சாகித்ய அகாதமி’ விருது பெற்ற 76 வயது நாஞ்சில் நாடன், இங்குள்ள எழுத்தாளர்ச் சமூகத்தை ஊக்குவித்தார். 

விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற (மார்ச் 18) ‘வெண்மையின் நிறங்கள்’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது திரு நாஞ்சில் நாடன் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இவ்வாண்டு எட்டாவது முறையாக நடத்தப்படும் வாசகர் வட்டத்தின் ஆண்டு விழாவில் சுமார் 85 பேர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர் எழுத்தாளர் சித்ரா ரமேஷ் எழுதிய ‘வெண்மையின் நிறங்கள்’ 17 சிறுகதைகளை உள்ளடக்கி உள்ளது. கொவிட்-19 கிருமிப்பரவல் தொடங்கிய சமயத்தில் சிறுகதைத் தொகுப்பை எழுத ஆரம்பித்து அதனை முடிக்க மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாக திருவாட்டி சித்ரா தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

உடல்நிலை காரணமாக எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் தொடக்க உரைக்கு வர இயலாததால் அவருக்குப் பதிலாக திருவாட்டி சித்ராவின் நண்பர் திருவாட்டி அனுராதா மோகன் உரையாற்றினார்.

சென்னையில் இவ்வாண்டு ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற நூல் வெளியீட்டின்போது எழுத்தாளர் சாம்ராஜ், சுருக்கமாக உள்ள தம் கதைகளைச் சுதந்திரத்துடன் இன்னும் விரிவாக எழுதும்படி பரிந்துரைத்ததை நினைவுகூர்ந்த திருவாட்டி சித்ரா, அவரது கூற்றை ஆக்கபூர்வமான விமர்சனமாக எடுத்துக்கொண்டதாகக் கூறினார்.

முதலாளித்துவம், பொதுவுடைமைச் சிந்தனை, சமூக முன்னேற்றம், பெண்ணியம் போன்ற தத்துவங்களின் அறிமுகத்தைச் சிறுகதைகளிலிருந்து பெற்றதாகக் கூறும் அவர், சமூக உண்மை நிலையை எடுத்துக்காட்டும் சிறுகதையின் பேராற்றலை எடுத்துரைத்தார் .

(இடமிருந்து) எழுத்தாளர்கள் ஷநவாஸ், திருவாட்டி சித்ரா ரமேஷ், நாஞ்சில் நாடன் மற்றும் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் டாக்டர் என் ஆர் கோவிந்தன். படம்: கி.ஜனார்த்தனன்

திருவாட்டி சித்ராவின் உரைக்குப் பின் க. சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள நாஞ்சில் நாடனின் உரை இடம்பெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள மூன்றாவது முறையாக சிங்கப்பூருக்கு வந்துள்ளதாகக் கூறிய அவர், தம் 68ஆவது வயதில் வாசகர் வட்டத்தின் அழைப்பில் முதன்முறையாக சிங்கப்பூர் வந்ததை நினைவுகூர்ந்தார்.

இனி தொடர்ந்து சிங்கப்பூர் வரவிரும்புவதாக திரு நாஞ்சில் நாடன் கூறியபோது பார்வையாளர்கள் உவகையுடன் கைத்தட்டினர். 

சிங்கப்பூர் இலக்கியம் மீதுள்ள தமிழக இலக்கியவாதிகளின் எண்ணப்போக்கு மாறியுள்ளதைத் திரு நாஞ்சில் நாடன் சுட்டினார். கடந்த 25, 30 ஆண்டு காலமாக தமிழக வாசகர்களின் கவனம் சிங்கப்பூர், மலேசிய எழுத்துகள் பக்கம் திரும்பியுள்ளதாக கரவொலி நிரம்பிய அரங்கத்தில் அவர் கூறினார்.

கோவையில் நடைபெற்ற சிறுவாணி சிறுகதைப் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட 250 சிறுகதைகளில் தாம் தேர்ந்தெடுத்த 12 சிறந்த கதைகளில் இரண்டு, சிங்கப்பூரைச் சேர்ந்த சிறுகதைகள் எனப் பின்னர்தான் தனக்குத் தெரியவந்ததாக திரு நாஞ்சில் நாடன் கூறினார்.

“அந்த இரண்டு கதைகளை எழுதியவர்கள் இங்கு அமர்ந்துள்ளனர்,” என்றார் அவர். மணிமாலா மதியழகன், தமிழ்ச்செல்வி ஆகியோரே அந்த எழுத்தாளர்கள் என தமிழ் முரசு பின்னர் அறிந்தது.

அழகுநிலா, வித்யா அருண், ஜெயந்தி சங்கர் உள்ளிட்ட சிங்கப்பூர் எழுத்தாளர்களைப் பாராட்டியது மட்டுமின்றி பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில்’ என்ற பாடலைப் பாடிய இசை ஆசிரியர் சுந்தரி சாத்தப்பனையும் அவருடன் பாடிய அவரது மாணவியையும் திரு நாஞ்சில் நாடன் பாராட்டினார்.  

தமிழில் என்னென்ன சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதற்குக் கெடுபிடியான வரையறைகளை உருவாக்கும் போக்கை நிராகரிக்கும் விதமாக திரு நாஞ்சில் நாடனின் உரை அமைந்திருந்தது.  

“நாகணவாய் புள் என்ற தமிழ்ப்பெயர் கொண்ட பறவை இனத்தை மக்கள் பொதுவாக மைனா என்ற உருதுசொல்லால் அழைக்கின்றனர். தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டு அச்சொல் இப்போது தமிழாக ஒலிக்கிறது” என்றார் அவர்.

தமிழில் கிட்டத்தட்ட 20,000 பிற மொழிச் சொற்கள் புழக்கத்தில் உள்ளதாக திரு நாஞ்சில் நாடன் கூறினார். அவற்றில் சுமார் 12,000 சொற்கள் சமஸ்கிருதச் சொற்களாக இருக்கக்கூடும் என்றும் சுமார் 4,000 சொற்கள் அரபுச் சொற்களாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உருது, ஜப்பானிய, ஆங்கில, போர்ச்சுக்கீசிய சொற்கள் தமிழ் மொழியில் இருக்க, மலாயிலிருந்து நூறு சொற்களைச் சேர்க்க முடியும் என்றால் அவ்வாறு செய்வது மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாக இருக்கும் என்கிறார் அவர். மொழிவல்லுநர்களின் குறைகூறல்கள் எழுந்தாலும் இயல்பாக வாழ்வில் எழும் அச்சொற்களைத் தைரியத்துடன் பயன்படுத்தும்படி அவர் எழுத்தாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

அருணகிரிநாதர் பாடல் ஒன்றில் ‘குக்குடம்’ என்ற சொல் சேவலைக் குறிப்பதாக அண்மையில் தெரிந்துகொண்டதாகக் கூறிய திரு நாஞ்சில் நாடன், தம் கற்றல் பயணம் இன்னும் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) காலையில் திரு நாஞ்சில் நாடனைச் சந்திக்கும் மற்றொரு வாய்ப்பை வாசகர்கள் பெற்றனர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வாசகர் வட்ட ஆண்டு விழாக்களில் ஜெய மோகன், பவா செல்லதுரை, சாரு நிவேதிதா உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!