கல்லீரல் நலம் சார்ந்த முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை சிங்கப்பூரர்கள் மத்தியில் அதிகரிக்கத் துணைபுரியும் இலக்குடன் தொடங்கப்பட்டுள்ளது கொழுப்பு கல்லீரல் நோய் பரிசோதனை இயக்கம்.
கல்லீரல் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியவும் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சையில் உதவிடும் வகையிலும், குறைந்த வருவாய் ஈட்டுவோருக்கான இந்த முதல் இலவசக் கொழுப்பு கல்லீரல் நோய் பரிசோதனையை, 365 புற்றுநோய்த் தடுப்புச் சங்கம்’ (‘365 Cancer Prevention Society’ - 365CPS) அறிமுகப்படுத்தியுள்ளது .
கல்லீரல் வீக்கம் மற்றும் கொழுப்பு கல்லீரல் என்று பரவலாக அறியப்படும் கல்லீரல் வியாதியின் தாக்கம், உலகளவில் அதிகரித்தவண்ணம் உள்ளது. கல்லீரல் சார்ந்த நோய்கள் குறிப்பாக ‘வளர்சிதை மாற்றச் செயலிழப்பு தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோய்கள்’ தேசத்தின் மூத்தோர் மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினரைப் பாதிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ’365சிபிஎஸ்’ தெரிவித்துள்ளது.
கல்லீரல் நோய் பொதுவாக எந்தவொரு அறிகுறியையும் காட்டுவதில்லை. பெரும்பாலும் நோயின் பாதிப்பைக் குறைக்க இயலாத கட்டத்தில், நோய் முற்றிய நிலையில்தான் இந்த பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
‘சீரான கல்லீரல், சீரான உடல்நலம்’ (Better Liver, Better Health) எனும் இந்தப் பரிசோதனை இயக்கம் ஆகஸ்ட் 31வரை நடைபெறும். கல்லீரல் புற்றுநோய் தாக்கும் அபாயத்தில் இருக்கும் நபர்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் அறிமுகம் கண்டுள்ள இந்த இயக்கத்தின் வாயிலாக கல்லீரல் நலம் குறித்த சுகாதாரத் தகவல்களை மக்கள் அறியலாம்.
உடற்பருமன், நாட்பட்ட கல்லீரல் வியாதி அல்லது 2ம் வகை நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டிருக்கும் நெருங்கிய உறவினரைக் கொண்டோர் என்ற கூறுகளில் குறைந்தது ஏதேனும் இரண்டு அபாயக்கூறுகள் உள்ள நீல மற்றும் ஆரஞ்சு நிற “சாஸ்” அட்டை வைத்திருக்கும் 50 முதல் 75 வயதுக்கும் உட்பட்டோர் இந்த இலவச பரிசோதனை இயக்கதிற்குப் பதிவு செய்யலாம்.
இந்த பரிசோதனைக்குத் தகுதி பெறுவோர் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் நார்க்கட்டி இழைமத்தடிப்பு குறித்த அபாயத்தை கண்டறிந்து மதிப்பீடு செய்யும் வகையில் ‘ஃபைப்ரோஸிஸ்-4’ எனும் ரத்த பரிசோதனை மற்றும் பரிசோதனைக்கு முந்தைய பிந்தைய ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள இயலும்.
பரிசோதனை முடிவில், ஆக அதிக நோய் தாக்கும் அபாயம் உள்ளவர்களுக்கு அடுத்தகட்ட மருத்துவ ஆலோசனைகளுக்கான பரிந்துரைகள் வழங்கப்படும் எனவும் ‘365சிபிஎஸ்’ தெரிவித்துள்ளது.
கல்லீரல் அழற்சியைத் தொடர்ந்து தென்கிழக்காசியாவில் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புக்கு முக்கியக் காரணமாக கல்லீரல் நோய் உள்ளது. துவக்கத்திலேயே கண்டறிய தவறும் பட்சத்தில் கொழுப்பு கல்லீரல் நோய் இறுதிக்கட்டமான கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர பாதிப்புகளுக்கும் வழிவகுத்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரிசோதனை இயக்கம் குறித்து கருத்துரைத்தார், ’365சிபிஎஸ்’ன் நிதித் திரட்டு, சந்தைப்படுத்துதல், தன்னார்வலர் நிர்வாகம் ஆகியவற்றிற்கான உதவி இயக்குநர் திரு ஆண்ட்ரு சோ.
“நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் பிற உறுப்புகள் சரியாகச் செயல்படத் துணை செய்தல் உள்ளிட்ட 300க்கும் அதிகமான இன்றியமையா வேலைகளைச் செய்கின்றது.
“உடலின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு கல்லீரலுக்கு இருந்தாலும், கல்லீரல் நலன் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. கல்லீரல் புற்றுநோய் உலகளவில் அதிகரித்து வருவதால் இந்த நோயின் அபாயத்தைக் குறைக்க, இதற்கான பரிசோதனைகளை ஊக்குவிப்பது ஒரு விவேகமான நடவடிக்கை என்று கருதுகிறோம்,” என்று கூறினார்.
பரிசோதனை இயக்கத்திற்குப் பதிவு செய்தத் தகுதிபெறும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை ஊக்குவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


