தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் கோலாகலப் பொங்கல் கொண்டாட்டம்

வெளிநாட்டு ஊழியர்களின் உள்ளங்களில் பொங்கிய மகிழ்ச்சி

2 mins read
1d14857a-0466-4042-b7b2-73a329daa8c2
தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) மாலை வெகு விமரிசையாகப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்தேறின. - படம்:வெஸ்ட்லைட்
multi-img1 of 7

தாயகத்திலிருந்து தொலைவில் வாழ்ந்தாலும் தாங்கள் தங்கும் விடுதியில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை உற்சாகம் கரைபுரண்டோடக் கொண்டாடி மகிழ்ந்தனர் சிங்கப்பூர்வாழ் வெளிநாட்டு ஊழியர்கள்.

தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) மாலை வெகு விமரிசையாகப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்தேறின. வேலை முடிந்து வந்திருந்தாலும், களைப்பின்றி பொங்கல் விழாவில் பங்கேற்கத் திரண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.

இரவுப் பணிக்குக் கிளம்பும் பரபரப்புக்கு இடையே, வெளிநாட்டு ஊழியர் பன்னீர் செல்வம், 51, தங்கள் விடுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவை இன்முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். கப்பல் துறையில் பணியாற்றும் அவர், “விடுதியில் காணப்படும் பொங்கல் அலங்காரங்கள், வழிபாடுகள், மனதுக்கு நிறைவைத் தருகின்றன. புதிய நம்பிக்கையுடன் பணிக்குச் செல்கிறேன்,” என்றார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜகதீப் சிங், 31, “இங்கு நடைபெறும் இப்பொங்கல் விழாவில் என் தமிழ் நண்பர்கள் பங்கேற்பதை வியப்பு விலகாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது எனக்கும் ஆனந்தமாக உள்ளது,” என்றார்.

இயந்திரவியல் துறையில் பணியாற்றும் தனுஷ்பிரபு, 29, விடுதியில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக விடுப்பு எடுத்ததாகச் சொன்னார்.

“வீட்டில் உள்ளவர்களுக்குக் காலையிலேயே பொங்கல் வாழ்த்துகளைக் கூறிவிட்டு மாலையில் நடைபெறும் கொண்டாட்டத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தேன். வீட்டிலிருந்து வெகு தொலைவிலிருந்தபோதிலும், இன்று அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றுகூடி எங்கள் பாரம்பரியத்தைக் கொண்டாட முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் அவர்.

வெஸ்ட்லைட் தங்குவிடுதி 2011ம் ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களை நடத்திவருகிறது. வெளிநாட்டு ஊழியர்களுக்காகச் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் அதன் பத்துத் தங்குவிடுதிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக நடந்தேறியதாக வெஸ்ட்லைட் நிர்வாகம் கூறியது.

தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு வெஸ்ட்லைட் ஜுனிஃபர் தங்குவிடுதியில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நடந்தேறிய பொங்கல் விழா.
தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு வெஸ்ட்லைட் ஜுனிஃபர் தங்குவிடுதியில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நடந்தேறிய பொங்கல் விழா. - படம்:வெஸ்ட்லைட்

“விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் கலாசாரத்தைப் புரிந்துகொள்வதும் அவர்களை அரவணைத்து ஒருங்கிணைப்பதும் முக்கியம். பணிநிமித்தமாக அயல்நாட்டில் வசிக்கும் இந்த ஊழியர்களுக்குத் தங்கள் இல்லத்தில் வசிக்கும் உணர்வை நல்கிட இத்தகைய விழாக்கள் உதவுகின்றன,” என்று கூறினார் ஊழியர் தங்குமிடத் தலைவர் ஆல்ஃப்ரெட் லீ.

பொங்கல் விழாவை முன்னிட்டு உட்லண்ட்ஸ் விடுதி வளாகத்தில், தித்திக்கும் கரும்பும், வண்ணத் தோரணங்களும் பொங்கல் கொண்டாட்ட உணர்வைப் பரப்பின. தங்குவிடுதியின் நிர்வாகமும் ஊழியர்களும் இணைந்து பொங்கல் பானையில் சமைத்த சர்க்கரைப் பொங்கல் கூடியிருந்தோருக்கு விநியோகிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள் தனிமையில் இருப்பதாக உணரக்கூடாது என்ற நேச உணர்வு மேலோங்க நடைபெற்ற வெஸ்ட்லைட் பொங்கல் விழாவில் உறியடித்தல் உள்ளிட்டப் பற்பல விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்