தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங்காங் மருத்துவமனையில் முப்பரிமாண காலணி அச்சு

2 mins read
நீரிழிவு நோயாளிகளின் பாதப் பராமரிப்பில் மேம்பாடு
7c6de047-5ed6-4cb7-96a7-55a52b8e16e5
புதிய முப்பரிமாண அச்சுமுறையால் நோயாளிகள் ஒரே வாரத்தில் தங்கள் பாதங்களுக்கு ஏற்ற காலணிகளைப் பெறலாம்.  - படம்: ஹெல்த்365

நீரிழிவு உள்ளோரின் பாதங்களைப் பேணுவதற்கான புத்தாக்க முறை ஒன்றைச் செங்காங் பொது மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. 

முப்பரிமாண முறையில் அச்சிடப்படும் காலணி (sole) வழியாக நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்கப்படுகிறது.

சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையுடன் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

வழக்கமாக வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இத்தகைய காலணிகள், சிங்கப்பூரிலுள்ள நோயாளிகளை அடைய கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின்றன. பின்னர் நோயாளிகளுக்குப் பொருந்தக்கூடிய விதமாக அவற்றை மாற்றியமைக்கவேண்டும்.

இப்போது நோயாளிகள் ஒரே வாரத்தில் தங்கள் பாதங்களுக்குத் தோதான காலணிகளைப் பெறலாம். நீரிழிவுப் பராமரிப்பில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். 

பதியப்பட்ட பாதச்சுவடுகள்.
பதியப்பட்ட பாதச்சுவடுகள். - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரில் 400,000க்கும் மேற்பட்டோர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இங்கு மூவரில் ஒருவருக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. 

இந்தப் போக்கு தொடர்ந்தால், சிங்கப்பூரில் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2050க்குள் ஒரு மில்லியனுக்கு அதிகரிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

15 முதல் 25 விழுக்காடு வரையிலான நீரிழிவு நோயாளிகளின் பாதங்களில் புண்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், அவற்றை அறுத்து எடுக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.

அத்தகையோர்க்குக் கூடுதல் சேவை அளிக்கும் விதமாக மருத்துவமனையின் சேவைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளின் பாதங்களில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், காயங்களை ஆற்றுவதற்கான மேம்பட்ட பராமரிப்பை நல்கவும் முப்பரிமாண அச்சுமுறையால் தயாரிக்கப்பட்ட இந்தக் காலணிகள் உதவுகின்றன.
நீரிழிவு நோயாளிகளின் பாதங்களில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், காயங்களை ஆற்றுவதற்கான மேம்பட்ட பராமரிப்பை நல்கவும் முப்பரிமாண அச்சுமுறையால் தயாரிக்கப்பட்ட இந்தக் காலணிகள் உதவுகின்றன. - படம்: எஸ்பிஎச் மீடியா

நீரிழிவு நோயாளிகள், தங்கள் கால்களில் புதிய புண்கள் வரமால் காப்பதற்கும் காயங்கள் ஆறுவதற்கும் இந்தக் காலணிகள் முக்கியம்.

பாதங்கள் அறுத்தெடுக்கப்படுவதைத் தவிர்க்க பாதப்புண்களைச் சமாளிப்பது நீரிழிவு உள்ளவர்களுக்கு மிக முக்கியம். 

நீரிழிவு காரணமாக உடலுறுப்புகள் அறுத்தெடுக்கப்படுவோரின் விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பதால் காலதாமதமின்றி சரியான நிர்வாகம் தேவைப்படுகிறது என்று மருத்துவமனையைச் சேர்ந்த ஆலோசகர் ஃபெங் ஜியாஜுன்  கூறினார். 

உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்